கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் முதல் பாலக்காடு வரையிலான ரயில்வே வழித்தடத்தில், கடந்த 20 ஆண்டுகளில் 26 யானைகள் உயிரிழந்திருபதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அதே வழித்தடத்தில், தமிழக - கேரள எல்லையான வாளையாறு பகுதியில் இரண்டு பெண் யானைகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 14 -ம் தேதி அதிகாலையில் வாளையாறு - கஞ்சிக்கோடு இடையேயான ரயில்வே வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதி ஒரு பெண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது . அக்டோபர் 18 அன்று அதே பகுதியில் ரயில் மோதி காயமுற்று, காட்டுப் பகுதியில் ஒரு பெண் யானை உயிரிழந்த தகவல் வனத்துறையினருக்கு கிடைத்தது. ஒரே வாரத்தில் வாளையாறு பகுதியில் மட்டும் ரயில் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. போத்தனூர் முதல் பாலக்காடு வரையிலான ரயில்வே வழித்தடத்தில், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகவே உள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பாரத சக்கரவர்த்தி ஆகியோரின் முன்னிலையில் நடந்தது. டிவிஷனல் ரயில்வே பொறியாளர் தாக்கல் செய்த மனுவில், கஞ்சிகோடு - வாளையாறு பகுதியில் ரயிலின் வேகத்தை குறைப்பது சாத்தியமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் ' அப்பகுதியில் ரயிலின் வேகத்தை குறைக்க வேண்டும்' என்று அறிவுறுத்தினர்.
பாலக்காடு பிரிவு ரயில்வே மேலாளரை நவம்பர் 24-க்குள் உயர்நீதிமன்ற அமர்வில் நேரடியாக ஆஜராகி விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுமட்டுமில்லாமல், தெற்கு ரயில்வே பொது மேலாளரை, யானைகள் உயிரிழப்பு மற்றும் விபத்துகளை தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்றை அமைத்து ஆய்வு அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் யானைகளின் வழித்தடத்தில் இயக்கத்தில் இருக்கும் செங்கல் சூளைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் அதிரடியாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைப் பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் பாண்டியராஜனிடம் பேசினோம். அவர் பேசுகையில், '' எட்டிமடை, வாளையாறு, கஞ்சிகோடு பகுதிகளுக்கு இடையேயான ரயில்வே தடத்தில் தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. நடவடிக்கை எடுப்பதில் நிர்வாக ரீதியாக எல்லை பிரச்சனை வேறு வந்து விடுகிறது. கஞ்சிகோடு என்பது கேரள வனப்பகுதியாகும். இந்தக் குறிப்பிட்ட வழிதடத்தில் இரண்டு ரயில்வே லைன்கள் உள்ளன.
ஒன்று ஏ லைன், ஒன்று பி லைன். பி லைன் அடர் வனப்பகுதி வழியாக செல்கிறது. அதனால் பி லைனில் தான் அதிக விபத்துகளும் ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்க பி லைனில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்ய வேண்டும், இல்லையெனில் குறைந்தபட்சம் இரவு நேர போக்குவரத்தை குறைக்கவாவது செய்ய வேண்டும். போத்தனூர் முதல் பாலக்காடு வரையிலான பயணத்திற்கு மற்றொரு வழித்தடமான, போத்தனூர் - பொள்ளாச்சி - பாலக்காடு வழியில் ரயில்களை இயக்கலாம். இது ரயில்வே துறை சம்பந்தப்பட்ட விஷயம் என்று ஒதுங்கிவிடாமல், தமிழக எல்லைக்குள் வரும் எட்டிமடை முதல் வாளையாறு வரையிலான ரயில்வே வழித்தடத்தில் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு தெர்மல் சென்சிங் கேமராக்களை பொருத்த தமிழக வனத்துறையால் டெண்டர் விடப்பட்டது, வரவேற்கத்தக்கது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதிகளின் உத்தரவு மிகச் சரியானது. ரயில் மோதி நடக்கும் விபத்துகளுக்கும், உயிரிழக்கும் உயிரினங்களுக்கும் யாராவது பொறுப்பேற்க வேண்டும். இப்பிரச்சினைக்கு ஒரே நிரந்தர தீர்வு உயர்மட்ட பாலம் அமைத்து அதில் ரயில்களை இயக்குவதுதான். மற்ற அனைத்து முயற்சிகளும் தற்காலிக ஏற்பாடாக தான் இருக்கும், நிரந்தர தீர்வாக ஒருபோதும் இருக்காது'' என்று கூறி முடித்தார்.
விரைவாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நம்மை கொண்டு செல்லும் ரயில்கள், ஒரு சில இடங்களில் வன விலங்குகளின் உயிர்களுக்கு ஆபத்தாக இருப்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்திய ரயில்வே துறை, கேரள வனத்துறை, தமிழக வனத்துறை போன்ற அனைத்து துறைகளும் ஒன்று இணைந்து இதற்கான நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/TwHBRty
0 Comments