``என்னை ஷோருமுக்குள் வைத்து ஷட்டரை மூடினார்கள்!" - சிம்கார்டு வாங்கச் சென்ற நடிகைக்கு நேர்ந்த துயரம்

'ராண்டு' உள்ளிட்ட மலையாள சினிமாக்களில் நாயகியாக நடித்தவர் அன்னா ரேஷ்மா ராஜன். இவர் நேற்று மாலை ஆலுவாவில் வோடபோன்-ஐடியா ஷோரூமில் சிம்கார்டு வாங்கச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு நடந்த தகராறு குறித்து நடிகை அன்னா ரேஷிமா ராஜன் பொதுவெளியில் பேசியிருக்கிறார்.

இது குறித்து நடிகை அன்னா ரேஷ்மா ராஜன், ``என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதுபற்றி கேட்கலாம் என போன் செய்தேன். ஆனால் போன் கிடைக்கவில்லை. இதையடுத்து நேரில் சென்றுபார்த்தேன். அப்போதுதான் அம்மாவின் செல்போனில் உள்ள சிம்கார்டில் பிரச்னை என்பது தெரியவந்தது. அதையடுத்து வேறு டூப்ளிக்கேட் சிம்கார்டு வாங்குவதற்காக ஆலுவாவில் உள்ள வோடபோன்-ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஷோரூமுக்குச் சென்றேன்.

அன்னா ரேஷ்மா ராஜன்

வழக்கமாக நான் வெளியில் செல்லும்போது யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து, ஷால் கொண்டு தலையில் மூடிவிட்டுத்தான் போவேன். அப்படித்தான் நான் சிம்கார்டு ஷோரூமுக்கும் சென்றேன். அங்கிருந்த ஊழியர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அங்கு 25 வயதுக்கும் குறைவான வயதுடைய ஒரு பெண் ஊழியர் இருந்தார். அவர் அந்த ஷோரூமின் மேலாளர் என்பது பின்னர்தான் தெரியவந்தது. அவர் என்னிடம் நடந்துகொண்ட விதம் எனக்குப் பிடிக்காததால் அவரை நான் போட்டோ எடுத்தேன். அவரைப்பற்றி தெரிந்துகொள்ள அவர் அடையாள அட்டை எதுவும் அணியாததால் பிறகு அவரைப்பற்றி புகார் கொடுக்க தேவைப்படும் என்பதால்தான் போட்டோ எடுத்தேன். உடனே அவர் ஊழியர்களை அழைத்து ஷட்டரை மூடும்படி சொன்னார். ஊழியர்கள் ஷோரூமின் ஷட்டரை மூடினார்கள். என் கையைப் பிடித்து அங்கு உட்கார வைத்தார்கள். அதில் அவரின் நகம் என் கையில் கிழித்து காயத்தை ஏற்படுத்தியது.

போலீஸ் ஸ்டேஷன் எண் என்னிடம் இல்லை என்பதால் அவசர உதவி எண் 100-க்கு போன் செய்தேன். அதில் சில ஆப்ஷன்கள் கேட்டதால் என்னால் போலீஸை தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் என் தந்தை அரசியலில் இருப்பதால் அவரின் அரசியல் நண்பர்களை அங்கு அழைத்தேன். அவர்கள் போலீஸுக்குத் தகவல் சொல்லிவிட்டு அங்கு வந்தார்கள். பின்னர், அவர்களிடம் `ஷட்டரை திறந்துவிடுங்கள் போலீஸ் வரும்வரை போகமாட்டேன்' எனக் கூறினேன். அவர்கள் விடாததால் வருத்தத்தில் அழுதுவிட்டேன். அதற்கு என்னிடம் போட்டோவை டெலிட் செய்யும்படி சொன்னார்கள். நானும் போட்டோவை டெலிட் செய்துவிட்டேன். இதற்கிடையே, என் அப்பாவின் நண்பர்கள் வந்தார்கள், போலீஸும் வந்தது. ஷட்டரை திறந்தார்கள். அவர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறினேன். பின்னர் ஆலுவா காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

அன்னா ரேஷ்மா ராஜன்

காவல் நிலையத்துக்கு வந்த ஷோரூம் ஊழியர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். ஒருவரை வேலையை விட்டு நீக்க வைப்பது எளிது. ஆனால் அவருக்கு வேலை வாங்கிக் கொடுப்பது கடினம் என்பதால், நான் அந்த பெண் மேலாளரை மன்னித்து விட்டுவிட்டேன். ஆனால், வாடிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஊழியர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/f9yotZE

Post a Comment

0 Comments