`திருமணமான பெண்ணை வீட்டுவேலை செய்யச் சொல்வது கொடுமைப்படுத்துவது இல்லை’ - மும்பை உயர் நீதிமன்றம்

திருமணமாகி கணவன் வீட்டுக்கு வரும் பெண்கள், அங்கு வீட்டு வேலை செய்ய சற்றுக் கஷ்டப்படுவார்கள். பெற்றோர் வீட்டில் சில பெண்கள் வேலை செய்யாமல் இருந்திருப்பார்கள். அவர்கள், திருமணத்துக்குப் பின்னர் கணவன் வீட்டுக்கு வந்த பின்னர், ஆரம்ப நாள்களில் வேலை செய்ய சிரமங்களை எதிர்கொள்வார்கள். சில வீடுகளில், இதனால் தகராறு ஏற்படுவதுண்டு. அதுபோன்ற ஒரு பிரச்னை மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள பாக்யா நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தினி என்ற பெண், தன் கணவன் மற்றும் அவரின் பெற்றோருக்கு எதிராகக் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸில் புகார் செய்துள்ளார். இப்புகாரை எதிர்த்து அப்பெண்ணின் கணவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அப்பெண் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், `என் கணவனும், அவர் வீட்டினரும், திருமணமான ஒரு மாதத்துக்கு என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டனர்.

அதன் பிறகு வீட்டு வேலைக்காரியைப் போல் நடத்த ஆரம்பித்தனர். திருமணமான ஒரே மாதத்தில் கார் வாங்க 4 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதை செய்தனர்’ என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அப்பெண்ணின் கணவர் குடும்பம் தரப்பில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், `சம்பந்தப்பட்ட பெண் தனது முதல் திருமணத்தின்போதும் கணவன் மீது இதே குற்றச்சாட்டைத்தான் சுமத்தினார் என்றும், இப்புகாரில் இருந்து கணவன் விடுவிக்கப்பட்டதாகவும்' தெரிவித்திருந்தனர்.

இதை விசாரித்த நீதிபதிகள் விபா கங்கன்வாடி, ராஜேஷ் பாட்டீல் ஆகியோர், `திருமணமான ஒரு பெண்ணிடம் குடும்பத்துக்காக வீட்டுவேலை செய்யச் சொல்வதை வீட்டு வேலைக்காரிக்கு சமமாகக் கருத முடியாது. அதோடு இதைக் கொடுமைப் படுத்துவதாகவும் சொல்ல முடியாது. வீட்டு வேலை செய்ய முடியாது என்றால் திருமணத்துக்கு முன்பே இது குறித்து தெரிவித்திருக்க வேண்டும். இதன் மூலம் மாப்பிள்ளை வீட்டார் திருமணம் குறித்து மறுபரிசீலனை செய்திருப்பார்கள். அல்லது திருமணமானவுடன் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கலாம்.

பணிப்பெண்

கணவன் வீட்டார் கொடுமைப்படுத்துவது உறுதிசெய்யப்பட்டால் 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். அதே சமயம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சித்ரவதை செய்வதாக கணவர் வீட்டாருக்கு எதிராக வெறுமனே குற்றம்சாட்டுவது, சட்டப்பிரிவு 498ஏ-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப் போதுமானது இல்லை. எந்த மாதிரியான சித்ரவதை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். வெறுமனே சித்ரவதை செய்ததாகச் சொல்வதைக் கொண்டு ஒருவர் கொடுமைப்படுத்துவதாக முடிவுக்கு வந்துவிட முடியாது. கணவன் வீட்டாருக்கு எதிராக பெண் கொடுத்துள்ள புகாருக்கு போதிய சாட்சியம் இல்லை’ என்று கூறி கணவன் வீட்டார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/IJ5QL4Y

Post a Comment

0 Comments