பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல வடிவங்களில் நடைபெறுகின்றன. பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல், வரதட்சணை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இது போன்ற செயல்களிலிருந்து சிறுமிகள், பெண் குழந்தைகள்கூட தப்புவதில்லை. மும்பையிலுள்ள பெண்கள் காப்பகத்தில் 16 வயது மைனர் பெண் ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து அவரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவர் பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். பெண்கள் காப்பகத்தில் இருக்கப் பிடிக்காமல், தான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்ட ஆரம்பித்தார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பை நாயர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். சிகிச்சையின்போது மருத்துவமனையிலிருந்து மைனர் பெண் தப்பிச் சென்றுவிட்டார்.
அவர் சிஎஸ்டி ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது இரண்டு டாக்ஸி டிரைவர்கள் அவரை அணுகிப் பேச்சுக்கொடுத்தனர். அவர்களிடம் அந்தப் பெண் தான் வேலை தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். உடனே தாங்கள் வேலை வாங்கிக்கொடுப்பதாகக் கூறி அழைத்துச் சென்று லாட்ஜ் ஒன்றில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர். இதையடுத்து அந்தப் பெண் மீண்டும் தான் தங்கியிருந்த பெண்கள் காப்பகத்துக்குச் சென்று தனக்கு நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து காப்பகப் பொறுப்பாளர் இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்கு பதிவுசெய்து அபிமன்யூ என்ற டாக்ஸி டிரைவரைக் கைதுசெய்துள்ளனர். இது குறித்து அதிகாரி ராஜேஷ் பவார் கூறுகையில், ``மைனர் பெண் மாட்டுங்கா பெண்கள் காப்பகத்தில் இருந்தபோது வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறார். அதோடு தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவமனையிலிருந்து தப்பித்து புறநகர் ரயில் மூலம் ஒவ்வோர் இடமாகச் சுற்றியிருக்கிறார். இறுதியில் சிஎஸ்டி ரயில் நிலையத்துக்கு வந்தபோது அவரை அணுகிய இரண்டு டாக்ஸி டிரைவர்களிடம் தான் வேலை தேடுவதாக தெரிவித்துள்ளார். அவர்கள் வேலை வாங்கித்தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒருவரைக் கைதுசெய்துவிட்டோம். மற்றொருவரைத் தேடிவருகிறோம். சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம்” என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/mz5iJfk
0 Comments