முல்லை பெரியாறு அணைக்கு எதிராக குறும்படம்! தமிழக விவசாயிகள் கண்டனம்!

​கடந்த 2011 -ம் ஆண்டு கேரள இயக்குநர் சோகன்ராய் என்பவர் `டேம் 999’ என்ற சினிமாவை எடுத்தார். அந்தப்படம், முல்லை பெரியாறு அணை உடைந்து பல லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்ப, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, `டேம் 999’ திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதித்தார்.

டேம் 999 படப் போஸ்டர்

இதனைத் தொடர்ந்து, கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அதைத் தொடர்ந்து 42 நாள்கள் தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் வழித்தடம் மறிக்கப்பட்டது. இதனால் கேரளத்தின் உணவு தேவைக்கான 80 சதவீத காய்கறி தேனி மாவட்டத்தில் இருந்து செல்லாமல் தடைபட்டது. இதன் காரணமாகத்தான் கேரள அரசு, அவ்விவகாரத்தில் இருந்து பின்வாங்கியது.  ஆனால் சிறு இடைவெளிக்கு பிறகு வழக்கம் போல, பிரச்னையை தொடங்கிவிடுகின்றனர்.

இதேபோல இயக்குநர் ஜி.எஸ்.பிரதீப் `முல்லைப்பெரியாறு அணை - ஒரு முன் கருதுதல்’ என்ற 3 டி அனிமேஷன் படத்தை வெளியிட்டார். அந்தப் படமும் முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்பதைப் பற்றியே பேசியது.

முல்லை பெரியாறு அணை

ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்தின் போதும் கேரளத்தினர்  முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக ஏதேனும் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக முல்லை​ ​பெரியாறு அணை குறித்து தவறான கருத்துக்களை கேரள மக்களிடம் பரப்பி, தொடர்ந்து பீதியை ஏற்படுத்தி வருபவர் கேரள வழக்கறிஞர் ரசல் ஜோய். இவர் முல்லை​ ​பெரியாறு அணை பலவீனமானது எனவும், அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக தனியாக அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முல்லை பெரியாற்றின் விவரங்கள் குறித்த 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்றை எடுக்க இருப்பதாகவும், இதற்காக 30 லட்சம் ரூபாய் தேவை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த ஆவணப்படம் வர இருப்பதாகவும் கூறி கேரளாவில் பணம் வசூல் செய்கிறார் என்ற தகவல் தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முல்லை பெரியாறு அணைக்கு எதிரான `ஷைன் ஆஃப் காட்’ எனும் குறும்படத்தை நேற்று தனது சேவ் கேரளா பிரிகேட் அமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ``இந்தப் படத்தில் வரும் காட்சியில் ஒரு வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் அட்வகேட் ரசல் ஜோய், முல்லைப் பெரியாறு அணை எப்படியெல்லாம் உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை பற்றி பாடம் நடத்திக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு குடும்பத் தலைவர். அந்த குடும்பத் தலைவர், ஒரு கட்டத்தில் இப்போ உடையுமோ, அப்ப உடையுமோ  என்று தினம் தினம் சாவதை விட, ஒரு வெடிகுண்டை வைத்து டேமை உடைத்து விடலாமா என்று கத்துகிறார்​. ​

மற்றொரு காட்சியில், ஒருவர் சீனாவில் 1975 ஆம் ஆண்டில் ஒரு அணை உடைந்ததாகவும், இரண்டரை லட்சம் பேர் இறந்ததாகவும் குழந்தைகளிடம் கூறுவது போல அமைக்கப்பட்டுள்ளது. 

அன்வர் பாலசிங்கம்

உச்சநீதிமன்றமும், பல்வேறு நிபுணர் குழுக்களும் முல்லை பெரியாறு அணை உறுதியாக இருப்பதாக பலமுறை கூறிவிட்டபோதிலும்,​ ​அணைக்கு எதிராக விஷம பிரசாரம் செய்யும் ​ரசல் ஜோயை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இந்தப் படத்தை யூடியூப்பில் இருந்து நீக்கம் செய்வதற்கு கேரள மாநில காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு மாநில உறவை சீர்குலைக்கும்  விதமாக செயல்படும் ரசல் ஜோய் கூட்டாளிகள்  மற்றும் இந்தப் படத்தில் நடித்த குழந்தைகளை தவிர்த்து அனைவரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்'' என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/e2DU3dT

Post a Comment

0 Comments