கேரள மாநில சி.பி.எம் முன்னாள் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் (69), கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் அவர் காலமானார். கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு வினோதினி என்ற மனைவியும், பினோய் கொடியேரி, பினீஷ் கொடியேரி என இரண்டு மகன்களும் உள்ளனர். உடல்நலக்குறைவால் மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய அன்றே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எம்.வி.கோவிந்தன் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கொடியேரி பாலகிருஷ்ணன் தலைமைக்குழு உறுப்பினராக இருந்த நிலையில், மரணம் அடைந்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு அமைச்சர்களுடன் 12 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நேற்று இரவு டெல்லியிலிருந்து பின்லாந்து புறப்பட திட்டமிட்டிருந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவால் அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு கண்ணூர் சென்றுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேரி பாலகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கொடியேரி பாலகிருஷ்ணனின் உடல் நேற்று கண்ணூர் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று மாலை 3 மணியளவில் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது.
கேரள மாநிலம், கண்ணூரில் கொடியேரி மொட்டும்மேல் குஞ்ஞிண்ணி குறுப்பு - நாராயணி அம்ம ஆகியோருக்கு மகனாக 1953-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி கொடியேரி பாலகிருஷ்ணன் பிறந்தார். கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு 6 வயது இருக்கும்போது அவர் தந்தை இறந்ததால் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். மாணவர் பருவத்திலிருந்து சி.பி.எம் கட்சியில் இணைந்தார். 1982, 1987, 2001, 2006, 2011 என ஐந்து முறை தலசேரி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006-ல் வி.எஸ்.அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார்.
2015-ல் சி.பி.எம்., மாநில செயலாளராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற அடுத்த வருடமே சட்டசபைத் தேர்தலை திறம்பட எதிர்கொண்டார். 2016-ல் பினராயி விஜயனை முதல்வர் பதவிக்கு கொண்டுவந்த உழைப்பை அங்கீகரித்து 2018-ல் மீண்டும் மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தமட்டில் முதல்வர் பதவியைவிட முக்கியமான பொறுப்பாக மாநிலச்0 செயலாளர் பதவி பார்க்கப்படுகிறது. ஆனாலும், எளிதில் அணுகக்கூடிய எளிமையான தலைவராக இருந்தார் கொடியேரி பாலகிருஷ்ணன்.
முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், இப்போதைய முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருக்கு இடையே அரசியல்ரீதியாக பனிப்போர் நடந்த காலத்தில் இருவரையும் மத்தியஸ்தம் செய்யும் வகையில் கொடியேரி பாலகிருஷ்ணன் செயல்பட்டார். துபாய் பார் டான்சர் பாலியல் வன்கொடுமை வழக்கில் மூத்த மகன் பினோய் கொடியேரியும், பெங்களூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இளைய மகன் பினீஷ் கொடியேரியும் சிக்கியதால் மனம் நொந்திருந்தார் கொடியேரி பாலகிருஷ்ணன். அந்த சமயத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சிறிதுகாலம் கட்சி பொறுப்பிலிருந்து விடுப்பு எடுத்து சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் விஜயராகவன் பொறுப்பு செயலாளராக செயல்பட்டிருந்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/dtWacwr
0 Comments