மும்பையின் மத்தியப் பகுதியிலுள்ள தாராவியில் ஆசியாவிலேயே அதிக அளவிலான குடிசைகள் இருக்கின்றன. இந்தக் 0குடிசைகளை இடித்துவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் திட்டம் கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வருகிறது. இந்தத் திட்டத்துக்கு இதற்கு முன்பு பல முறை டெண்டர் விடப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது. கடைசியாக 2020-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இதில் இரண்டு நிறுவனங்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தன. ஆனால் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழில் நுட்பக் காரணங்களைக் காட்டி இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தற்போது புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜ.க கூட்டணி அரசு மீண்டும் தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்திற்கு சர்வதேச அளவில் டெண்டர் விட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு டெண்டர் கொடுக்க இந்த மாதம் 31-ம் தேதி கடைசி நாளாகும். மொத்தம் ரூ.20 ஆயிரம் கோடியில் இந்தக் குடிசை மேம்பாட்டுத் திட்டம் நிறைவேற்றப்படும். இந்தத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் நிறுவனம் குறைந்தபட்சம் ரூபாய் 1,600 கோடி அளவுக்கு முதலீடு செய்வதோடு இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தனியாக கூட்டு நிறுவனம் ஒன்றையும் தொடங்க வேண்டும். மேலும் இந்தத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் நிறுவனம் தனது சொந்த முதலீடாக ரூ.400 கோடி செலவிடவேண்டும். மேற்கொண்டு தேவைப்படும் நிதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளியிலிருந்து ஏற்பாடு செய்யவேண்டும். திட்டத்திற்கு டெண்டர் விடும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். பணிகள் ஒதுக்கீடு செய்த நாளிலிருந்து 7 ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் முடிக்கவேண்டும். திட்டத்தின் கீழ் தாராவியிலிருக்கும் அனைத்து குடிசைகளும் மாநில குடிசை மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும். இதை செயல்படுத்தும் நிறுவனம் தாராவியில் இருக்கும் குடிசைவாசிகளுக்கு தேவையான வீடுகளை இலவசமாக கட்டிக்கொடுத்துவிட்டு எஞ்சிய இடத்தில் வீடுகளைக் கட்டி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்துக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் நிறுவனம் மாற்று வீடு பெற தகுதியான குடிசைவாசிகளை அடையாளம் காண சொந்தமாக கணக்கெடுப்பு நடத்தவேண்டும். இதற்கு அரசு தேவையான உதவிகளைச் செய்யும்.
56,000 குடும்பங்கள்!
தாராவியில் மொத்தம் 56,000 குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்தம் 240 ஏக்கர் பரப்பிலான தாராவியில் ஆயிரக்கணக்கான சிறுதொழிற்சாலைகள் இருக்கின்றன. குறிப்பாக லெதர், ஆடைகள் தயாரிப்பு, மண்பாண்டம், காலணிகள் தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிக அளவில் இருக்கின்றன. உலகத்திலேயே மிகவும் நெருக்கடியான மக்கள் தொகை கொண்ட குடிசைப்பகுதியாக அறியப்படும் தாராவியில் 10 லட்சம் பேர் வரை வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்து வந்த தாராவியில் இப்போது வட இந்தியர்கள் மற்றும் முஸ்லிம்களும் கணிசமாக குடியேறிவிட்டனர். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாநில அரசு ரயில்வே நிர்வாகத்திடம் குறிப்பிட்ட அளவு நிலத்தை விலைக்கு வாங்கி அதனை திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்திற்கு சலுகை விலையில் கொடுக்க திட்டமிட்டுள்ளது. திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மாநில அரசு மேம்பாட்டு ஒழுங்கு முறை விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அதோடு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்தும் 15 ஆண்டுகளுக்கு விலக்கு கொடுக்கப்படும் என்பது உட்பட பல்வேறு சலுகைகள் திட்டத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தாராவியை 7 செக்டர்களாகப் பிரித்து ஒவ்வொரு செக்டரையும் தனித்தனி பில்டர்களிடம் கொடுக்க திட்டமிடப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதில் முதல் செக்டரை அரசு நிறுவனமான மஹாடாவிடம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டது. அந்த டெண்டரும் பின்னர் ரத்து செய்யப்பட்டது. இப்போதாவது இந்தத் திட்டம் புத்துயிர் பெறுமா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/fFrBISG
0 Comments