மலையாள சினிமா நடிகரும், எழுத்தாளருமான வி.கே.ஸ்ரீராமன் நேற்று முன் தினம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அந்த பதிவில், "ஒரு நாள் என்னை கேரள மாநிலத்தில் சர்வாதிகாரியாக நியமித்தால், நான் குழி மந்தி என்ற வார்த்தையைப் பேசுவதையும், எழுதுவதையும் தடைசெய்வது தான் எனது முதல் ஆணை. மலையாள மொழியை குப்பையில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையாக அது இருக்கும். குழி மந்தி என்ற வார்த்தையை சொல்லக்கூடாது, பார்க்கக்கூடாது, பேசக்கூடாது" என பதிவிட்டிருந்தார். குழி மந்தி என்பது அரபு நாட்டு முறைப்படி தயாரிக்கும் பிரியாணி ஆகும். நான்கு அடி அளவில் குழி தோண்டி, அதில் அடுப்புக்கரி போட்டு, அந்த கனலில் கோழி அல்லது ஆட்டின் முழு இறைச்சி, அரிசி ஆகியவை அடங்கிய பாத்திரத்தை மூடி சில மணி நேரம் வைத்து விடுவார்கள். அதில் தயாரிக்கப்படும் பிரியாணி வித்தியாசமான சுவையாக இருக்கும் என்பதால் இந்த உணவு இப்போது இந்தியாவில் பிரபலமாகி வருகிறது.
குழி மந்தி என்ற அசைவ உணவை தடை செய்வதைப்பற்றி வி.கே.ஸ்ரீராமன் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்தது. 'தங்களுக்கு பிடிக்காததை தடை செய்பவர்கள்தான் அறிவு ஜீவிகளா வலம் வருகிறார்கள்' என சிலர் பின்னூட்டம் இட்டனர். சிலரோ குழி மந்தி என்ற வார்த்தை மலையாளத்தில் குழி பறிக்கும் பெருச்சாளியை குறிப்பதாகவும். அந்த வார்த்தையை தடை செய்ய வேண்டும் எனவும் பதிவு போட்டிருந்தார்கள். தனது பதிவு விவாதம் ஆனதைத் தொடர்ந்து அதற்கு விளக்கம் அளித்து மறொரு பதிவை வெளியிட்டார் வி.கே.ஸ்ரீராமன்.
அந்த விளக்க பதிவில் கூறுகையில், "குழி மந்தி உணவுக்கும் எனக்கும் எந்த விரோதமும் இல்லை. நான் குழி மந்தி சாப்பிட்டிருக்கிறேன். குழி மந்தி தயாரிப்பது பற்றியும், தயாரிக்கும் சமையல் கலைஞர் பற்றியும் நிகழ்ச்சி தயாரித்துள்ளேன். எனவே அந்த உணவோடு எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அந்தப் பெயர்தான் பிரச்னை .
நம் விருப்பங்களை வெளிப்படுத்த நாம் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. எனது பதிவு சிலருக்கு கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது என்பது எனக்கு புரிகிறது. இதற்கெல்லாம் நான்தான் காரணம் என்பதால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/A7pX0L6
0 Comments