ஈரோடு கேரள சமாஜத்தின் 75-வது ஆண்டு பவள விழா மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற முன்ளாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி நான் கேரள மாநில ஆளுநராக 5-9-2014-ல் பொறுப்பேற்றுக் கொண்டேன். முழுமையாக 5 ஆண்டுகள் அந்தப் பதவியிலிருந்த நான் 5-9-2019-ல் ஓய்வு பெற்று, எனது சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறேன்.
நான் கேரள ஆளுநராகப் பொறுப்பேற்றபோது கேரளத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டி முதல்வராக இருந்தார். அதன் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த 5 ஆண்டுகளிலும், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த இரண்டு முதல்வர்களுடனும் இணக்கமாகச் செயல்பட்டு வந்தேன். அவர்களின் குடும்ப நண்பராக இருந்து, அவர்களது இல்லத்தில் விருந்து உண்ணும் அளவுக்கு நல்ல உறவை வைத்திருந்தேன்.
கேரளத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர் நியமனம் உட்பட எவ்வித பிரச்னைகளுமின்றி கையாண்டதுடன், பல்கலைக்கழகங்களை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டேன். அதன் மூலம் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு முதல்வர் கையால் 5 கோடி ரூபாய் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் சட்டத்தை மீறி செயல்பட்டால் அதைத் தடுக்கலாம், ஆனால் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளால் கொண்டு வரப்படும் நல்ல சட்டங்களை ஆளுநரால் தடுக்க முடியாது. கேரள ஆளுநராக இருந்த நானும், முதலமைச்சரும் மக்களுக்கான பல திட்டங்களை இணைந்து வழங்கியிருக்கிறோம். இதனைப் பார்த்து மத்திய அரசு மற்ற ஆளுநர்களுக்கும் எங்களது நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கியது. எனக்கும் மலையாள நண்பர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. உச்ச நீதிமன்றத்தில் சுமார் 30 ஆண்டுகள் நான் பணியாற்றியபோது எனக்கு பாதுகாப்பு அளித்தவர்கள் மலையாளிகள்தான்.
இங்கு வரவேற்புரையின்போது தமிழகத்திலிருந்து சென்ற இரண்டாவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்று குறிப்பிட்டார்கள். தமிழகத்திலிருந்து சென்ற முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நான்தான் என்பதை, கலைஞர் மூன்று காரணங்களுடன் விளக்கியிருக்கிறார். எனக்கு முன்பாக 1951-ல் பதஞ்சலி சாஸ்திரி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி வகித்திருந்தாலும், தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்த அவர் பிறந்தது ஆந்திரத்திலுள்ள சித்தூரில்தான். இந்த சித்தூர், பிற்காலத்தில் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டுவிட்டது.
எனவே, 2014-ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நான் பொறுப்பேற்றபோது, இதனைக் குறிப்பிட்டு தமிழகத்தின் முதலாவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நான்தான் என்று கலைஞர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/TEOcK5x
0 Comments