மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயில்களில் ஏறுவது என்பது குதிரைக்கொம்பாகத்தான் இருக்கும். ஆண் பயணிகளுக்கே இந்த நிலை என்றால் பெண் பயணிகளின் நிலையை கேட்கவே வேண்டாம். அவர்கள் ஒவ்வொரு நாளும் ரயிலில் ஏறி வேலைக்குச் சென்று வருவதை ஒரு போராட்டமாக கருதுகின்றனர். முட்டி மோதி ரயிலில் ஏறி விட்டாலும் உள்ளே சீட் பிடிப்பதில் தகராறு ஏற்படுகிறது. அடிக்கடி மும்பையில் புறநகர் ரயில்களில் இருக்கையில் அமருவது தொடர்பாக பெண்கள் சண்டையிட்டுக்கொள்வதுண்டு. பெரும்பாலும் இந்தச் சண்டை அடுத்த ரயில் நிலையம் வருவதற்குள் முடிந்துவிடும். சில நேரங்களில் இந்தச் சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்வதுண்டு. ரயில்வே போலீஸார் தலையிட்டு தகராறை தீர்த்து வைப்பர். அது போன்ற ஒரு சம்பவம்தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது.
தானேவிலிருந்து பன்வெல் செல்லும் புறநகர் ரயில் துர்பே ரயில் நிலையம் வந்தபோது இருக்கையில் அமருவது தொடர்பாக 3 பெண் பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அது அடிதடியாக மாறியது. அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர்.
சிறிது நேரத்தில் இந்தச் சண்டையில் மற்ற பெண்களும் சேர்ந்து கொண்டனர். இந்தச் சண்டையால் ரயில் பெட்டியே போர்க்களம் போன்று மாறியது. சண்டையில் ஈடுபட்ட பெண்கள் ஒருவரை ஒருவர் முடியைப் பிடித்து இழுத்து தாக்கிக்கொண்டனர். சில பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பான பகுதியை நோக்கி ஓடினர். ரயில் நெருல் ரயில் நிலையம் வந்தபோது சிலர் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே அந்த ரயில் பெட்டிக்குள் பெண் காவலர் சாரதா உள்ளே நுழைந்தார். உடனே சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். ஆனால் மீண்டும் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களின் சண்டையை பெண் காவலர் தீர்த்து வைக்க முயன்றார். ஆனால் பெண் காவலரையும் பெண் பயணிகள் விட்டு வைக்கவில்லை. அவரையும் அடித்து உதைத்தனர். இந்த மோசமான தகராறில் பெண் காவலர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் ரயிலிலிருந்து இறங்கும்போது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. காயமடைந்த பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வசாய் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சாம்பாஜி கூறுகையில், ``குல்நாத் கான்(50) என்ற பெண் தன் மகள் மற்றும் பேத்தியுடன் ரயிலில் தானேவிலிருந்து பயணம் செய்துள்ளார். ரயில் கோபர்கைர்னே வந்த போது சினேகா என்ற பெண் ஏறினார். ரயில் துர்பே வந்த போது ஒரு இருக்கை காலியானது. உடனே அந்த இருக்கையில் சினேகா அமர்ந்தார். அந்த இருக்கையில் குழந்தையை அமரவிடாமல் சினேகா அமர்ந்து கொண்டதாகக் கூறி சினேகாவுடன் தாயும், மகளும் தகராறு செய்தனர். தாயும் மகளும் சேர்ந்து சினேகாவின் தலைமுடியை பிடித்துக்கொண்டு அடித்து உதைத்துள்ளனர். மற்ற பயணிகள் அதனை தடுக்க முயன்றதில் முடியாமல் போனது. இந்தத் தகராறு தொடர்பாக தாய், மகள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/6dkSy5L
0 Comments