பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் இமயமலையின் மடியில் வீற்றிருக்கும் ஜம்மு - காஷ்மீர் தன் இயற்கை அழகிற்காக உள்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அனைவராலும் அறியப்படும் மாநிலமாகும். தற்போது காஷ்மீர் இயல்பு நிலைக்கு வருவதற்குத் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. நாளுக்கு நாள் பயங்கரவாதம் அதிகரித்து சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே சொத்துக்களை விட்டுவிட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. கிளர்ச்சி அதிகரித்ததால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் டிசம்பர் 31, 1989-ல் 12 திரையரங்குகள் பெரிய அளவிலான தீவிரவாதத்தை எதிர்கொண்டு மூடப்பட்டன.
பின்பு 1996-ல் ஃபரூக் அப்துல்லா தலைமையிலான அரசாங்கம் பிராட்வே மற்றும் நீலம் ஆகிய இரண்டு திரையரங்குகளை மீண்டும் திறக்க முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது பின் 1999-ம் ஆண்டில் லால் சௌக்கில் ரீகல் திரையரங்கம் திறக்கப்பட்ட முதல் வாரத்திலேயே தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதால் மீண்டும் மூடப்பட்டது. பின்பு பல திரையரங்குகள் வணிக வளாகங்களாக மாறின. இதனால் அப்பகுதி மக்கள் பொழுதுபோக்கு இன்றி தவித்து வந்தனர். இந்நிலையில் பயங்கரவாதத்தின் பரவல் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 33 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ நகரைச் சேர்ந்த ஒரு காஷ்மிரி பண்டிட் வணிக குடும்பத்திற்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள திரையரங்கத்தை ஐநாக்ஸ் நிறுவனம் மறுசீரமைத்துள்ளது. மொத்தம் மூன்று திரைகள், 522 இருக்கைகள் கொண்ட மல்டிபிளக்ஸை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்துவைத்தார். செப்டம்பர் 26-ம் தேதி டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், அக்டோபர் 1-ம் தேதி முதல் காட்சியை வெளியிடத் திட்டமிட்ட அரசு அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உற்சாகமடைந்த துணைநிலை ஆளுநர் தெற்கு காஷ்மீரில் ஷோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் இரண்டு திரையரங்குகளைத் திறந்து வைத்துள்ளார். கூடுதலாக பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள பத்து மாவட்டங்களிலும் திரையரங்குகள் அமைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
இது குறித்துப் பேசிய திரையரங்கின் உரிமையாளர் திரு விகாஸ் தார், "பல உலக சினிமாக்கள் நல்ல கதைகள் இல்லாமல் இருக்கின்றன. காஷ்மீரிலிருந்து நாம் சொல்ல அற்புதமான கதைகள் உள்ளன" எனக் கூறினார். 1990க்கு முந்தைய சினிமா பார்வையாளர்களுக்கு முதல் நாளில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று கூறினார். "இது ஒரு வணிகமல்ல... சினிமாவின் மாயாஜாலத்தை மீண்டும் கொண்டுவர விரும்பினோம். அக்டோபர் 1-ம் தேதி ஒருவர் வந்தாலும் 100 பேர் வந்தாலும் வெற்றி கிடைக்கும்" என்றார். தினசரி காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களில் காட்சிகளைத் திரையிட இருப்பதாகவும் கூறினார்.
செப்டம்பர் 30-ம் தேதி புதிய காட்சிகளில் இந்தி 'விக்ரம் வேதா' மற்றும் மணிரத்னத்தின் பிரமாண்டமான படைப்பு - பொன்னியின் செல்வன் (PS)-I ஆகிய படங்கள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
33 ஆண்டுகளுக்குப்பிறகு தேதி காஷ்மீரிலுள்ள திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்ட 'விக்ரம் வேதா' அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 33 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வார இறுதியில் குவிந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் திரையரங்குகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் இது குறித்துப் பேசிய பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள், "இது ஒரு பொற்காலம். திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு தற்போதைய நிர்வாகம் செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இப்பகுதிகளில் திரையரங்குகள் அமைப்பது மந்தமான பொருளாதாரத்தை உயர்த்த உதவும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்துப் பேசிய 25 வயதான டேனிஸ் மன்சூர் என்ற டைக்குவாண்டோ வீரர், "புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் காஷ்மீரில் திறந்தபோது நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன். இதுவரை பெரிய திரையில் நாங்கள் படங்கள் பார்த்ததில்லை. காஷ்மீரில் நாங்கள் புதிய காற்றைச் சுவாசிப்பது போல் உணர்கிறோம்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Xaywk0I
0 Comments