கேரள மாநிலம் இடுக்கி அரசு பொறியியக் கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ மற்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யூ ஆகியவை மோதிக்கொண்டன. அந்த முன்விரோதத்தில் எஸ்.எஃப்.ஐ நிர்வாகியும், மாணவருமான தீரஜ் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கே.எஸ்.யூ மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தீரஜ் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தீரஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் நடைபயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாயின. இந்த நிலையில் சி.பி.எம் உண்டியல் மூலம் திரட்டப்பட்ட ஒரு கோடியே ஐம்பத்தி எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார்.
தீரஜின் தந்தை ராஜேந்திரனுக்கும், தாய் புஷ்கலாவுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தீரஜின் தம்பி அத்வைதின் படிப்புக்காக பத்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் தீரஜ் கொலை செய்யப்பட்டபோது தாக்குதலில் காயம் அடைந்த அவரது நண்பர்களான அமல் மற்றும் அபிஜித் ஆகியோரின் மேல் படிப்புக்காக தலா ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. பின்னர் செறுதோணி பகுதியில் தீரஜ் நினைவகம் அமைப்பதற்காக முதல்வர் பினராயி விஜயன் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், "இளைஞர்கள் நம் கட்சிக்கு வருகிறார்கள். வேறு கட்சிக்கு இளைஞர்கள் போகாததால் அவர்களை இல்லாமல் ஆக்க கொலை செய்கிறார்கள். காங்கிரஸ் மாநில தலைவர் வெளிப்படையாக ரத்த சாட்சிகளை அவமானப்படுத்துகிறார். தீரஜின் நிலை உங்களுக்கு ஏற்படும் என வெளிப்படையாக மாணவர்களை இங்குள்ள காங்கிரஸ் தலைவர் பயமுறுத்துகிறார். காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் மட்டுமல்ல அகில இந்திய தலைவர் வந்தபோதும் அதைதான் பார்க்க முடிந்தது.
பா.ஜ.க-வை எதிர்ப்பதாக ராகுல்காந்தி கூறுகிறார். ஆனால், ராகுல்காந்தி உருவத்திலும், நடவடிக்கையிலும் பா.ஜ.க-வின் வகுப்புவாதத்தை ஏற்றுக்கொள்கிறார். கேரளத்தில் 19 நாள்கள் ராகுல் காந்தி செலவிட்டுள்ளார். பா.ஜ.க-வுக்கு எதிராகவா இங்கு நடைபயணம் மேற்கொள்கிறார்? உ.பி-யில் 2 நாள்கள் மட்டுமே செலவிடுவதாக பெரிய விமர்சனங்கள் வந்தன. அதன்பிறகு அவர்கள் அதை 4 நாள்களாக அதிகரித்துள்ளார்கள். பா.ஜ.க வடிவத்திலும், குணத்திலும் வகுப்புவாதத்தை கொண்டுள்ளது. பா.ஜ.க-வை எதிர்கொள்ள அவர்களிடன் அடையாளங்களுடன் செல்லக்கூடாது. இதை காங்கிரஸ் கட்சியினரால் நிராகரிக்க முடியாது என்பதே உண்மை. பழைய காங்கிரஸ் அல்ல இப்போது இருப்பது. எல்லா காலத்திலும் தேர்தலுக்கு பிறகுதான் அரசைப்பற்றி நினைக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி இங்கு போட்டியிட வந்தார். மக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தனர். காங்கிரஸ் எம்.பி-க்கள் இந்த மாநிலத்துக்காக குரல்கொடுக்க தயாராக இல்லை. இந்த முறை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். எனவே காங்கிரஸ் கட்சியினர் கனவு காண வேண்டாம்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/yClhrc4
0 Comments