நாட்டில் தீண்டாமைக் கொடுமை சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ஆங்காங்கே பட்டியலினத்தவர்கள்மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலம், அவுரையா மாவட்டத்தில் பள்ளியொன்றில் படித்து வந்த 15 வயது பட்டியலின மாணவன் வகுப்பு தேர்வில் ஒரு வார்த்தையில் எழுத்துப்பிழை செய்திருந்ததாகக் கூறி, ஆசிரியர் அஸ்வினி சிங் என்பவர் கடந்த 7-ம் தேதி அந்த மாணவனைக் கடுமையாக அடித்து உதைத்திருக்கிறார். மாணவன் மயங்கி விழும்வரை பிரம்பால் அடித்திருக்கிறார் ஆசிரியர். இதில் மயங்கி விழுந்த மாணவனை அவன் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். பிரச்னை வெளியில் வராமல் இருக்கவேண்டும் என்பதற்காக மாணவனின் சிகிச்சைக்கு ஆசிரியர் அஸ்வினி சிங் முதலில் 10 ஆயிரம் ரூபாயும், பிறகு 30 ஆயிரமும் கொடுத்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு பணம் கொடுக்கவில்லை.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனும் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனான். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் கிராமத்துக்கு கொண்டு சென்றபோது மாணவன் படித்த பள்ளிக்கு எதிரில் அமர்ந்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியரைக் கைதுசெய்யும் வரை உடலை தகனம் செய்யமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் போலீஸார்மீது கல் வீசித்தாக்கினர். அதோடு போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர். போராட்டத்தில் பீம் ஆர்மி என்ற அமைப்பின் ஆட்களும் சேர்ந்து கொண்டனர்.
போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து குற்றவாளியை விரைவில் கைதுசெய்வதாகக் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மாணவனை அடித்த ஆசிரியர் அஸ்வினி தலைமறைவாகிவிட்டார். அவர்மீது வன்கொடுமை, கொலை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து அவரைத் தேடி வருகின்றனர். மாணவனுக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அது குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/mcJtOqa
0 Comments