குண்டும் குழியுமான சாலை, `உருளும் சேவை’ செய்த தன்னார்வலர்; வினோத போராட்டத்தின் காரணம் தெரியுமா?

மனதில் வேண்டுதலை வைத்துக் கொண்டு கோயில்களில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து பார்த்திருப்போம். இந்நிலையில், கோயில்களில் உருள்வதுபோல ஒருவர் ரோட்டில் ’உருளும் சேவை’ செய்து, வைரலாகி உள்ளார்.

Temple

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்ட சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், உருளும் சேவையை சமூக சேவையாளரான நித்யானந்தா ஒலகடு (Nityananda Olakadu) என்பவர் செய்துள்ளார். செப்டம்பர் 13, செவ்வாய்க்கிழமையன்று இந்திராலி பால சாலையின் பள்ளங்களுக்கு ஆரத்தி எடுத்து தேங்காய் உடைத்து, அதன் பின் உருண்டுள்ளார்.

இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய நித்யானந்தா ஒலகடு, ``கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே உடுப்பி - மணிப்பால் தேசிய நெடுஞ்சாலைக்கு டெண்டர் விடப்பட்டது. இருந்தபோதிலும் சாலை இன்னும் மோசமான நிலையில்தான் உள்ளது. இதுகுறித்து எந்தப் பிரச்னையையும் யாரும் எழுப்பவில்லை. உடுப்பி மக்கள் அப்பாவிகள். இந்தச் சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் தினமும் விபத்துகள் நேர்கின்றன. இந்த காரணத்தால் பல பசுக்களும் கன்றுகளும் இறந்துள்ளன. மாடு, கன்றுக்குட்டி என்ற பெயரில் ஓட்டு கேட்பவர்கள் கூட, சாலையின் அவல நிலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையைப் பயன்படுத்துகிறார்கள். முதலமைச்சர் கூட இந்த பாதையைக் கடந்து சென்றுள்ளார். சாலையைச் சீரமைக்கப் பிரதமர் நரேந்திர மோடி அல்லது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இங்கு வர வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

சாலைகளின் மோசமான நிலையை எடுத்துரைக்க, சாலைகளின் பள்ளங்களில் மீன் பிடிப்பது, சந்திரனில் விண்வெளி வீரர் நடப்பது போலக் குழிகளில் நடப்பது போன்ற புதுவிதமான பல போராட்டங்கள் கர்நாடகாவில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/rl3oPi6

Post a Comment

0 Comments