மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடத்தி வருகிறது. பா.ஜ.க-வின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சமீபகாலமாக ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர் அரசு அதிகாரிகளுக்கான பொதுக்கூட்டம் நடத்தி, குற்றச்சாட்டுகள் உள்ள சிலரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம்கூட, ஷியோபூரில் கடமை தவறியதாகக் கூறி ஒரு அதிகாரியை சஸ்பெண்ட் செய்தார்.
இந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் அமர்பதான் தொகுதியில், உணவுப் பொருள்களின் தரத்தை சோதனையிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி அரசியல் பிரமுகர்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராம்கெளவன் படேலுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். உடனே, அவர் உணவுப் பொருள்களின் தரத்தை சோதனையிட்ட அதிகாரியை தொலைபேசியில் அழைத்து, ``உன்னை தலைகீழாக தொங்கவிட்டுவிடுவேன்" என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியோ தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக வெளியான அந்த ஆடியோ பதிவில், ``அமர்பதான் தொகுதியில் எந்த ஒரு வியாபாரிமீதும் வழக்கு பதிவுசெய்யக்கூடாது. அதை மீறி வழக்கு பதிவுசெய்தால் நான் உன்னை தலைகீழாக தொங்கவிடுவேன்" என்று கூறியதாகக் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க, தனியார் செய்தி நிறுவனம் அமைச்சரை தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. அச்சுறுத்தலுக்கு உள்ளான அதிகாரியும் ஊடகங்களிடம் பேச மறுத்துவிட்டார். அமைச்சரின் இதுபோன்ற மிரட்டல்கள் அந்தப் பகுதியில் தொடர்வதாக அதிகாரிகள் புகார் தெரிவித்துவருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/JOohCmg
0 Comments