கொரோனாவுக்குப் பிறகு பாலிவுட்டில் வளர்ந்து வரும் பல நடிகர், நடிகைகள் போதிய பட வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மும்பை லோகண்ட்வாலா பகுதியைச் சேர்ந்த மாடல் அழகி அகான்ஷா மோகன் (30) என்பவர் அந்தேரி வர்சோவா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன் தினம் இரவு அறை எடுத்து தங்கினார். இரவில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டார். காலையில் ஹோட்டல் ஊழியர்கள் மாடல் அழகி தங்கியிருந்த அறையின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் முன்னிலையில் ஹோட்டல் ஊழியர்கள் தங்களிடமிருந்த சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே அகான்ஷா மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தார்.
உடனே போலீஸார் அகான்ஷா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதில், `என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை, நான் மகிழ்ச்சியாக இல்லை... மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுக்கிறேன், நான் அமைதியை விரும்புகிறேன்' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். போலீஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில் அகான்ஷா மோகன் கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் நிதி நெருக்கடிக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். வர்சோவா போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து விபத்து மரணம் என்று வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/pPj85wc
0 Comments