நாட்டின் இளம் மேயராக அறியப்பட்ட திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் - பலுச்சேரி எம்.எல்.ஏ சச்சின் தேவ் ஆகியோரது திருமணம், திருவனந்தபுரம் ஏ.கே.ஜி ஹாலில் எளிமையான முறையில் இன்று நடந்தது. ஆர்யா ராஜேந்திரனும், சச்சின் தேவும் சி.பி.எம் பாலசங்கத்தில் இருந்தே அறிமுகம் ஆனவர்கள்.
இவர்களது திருமணத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், சி.பி.எம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தங்கள் திருமணத்துக்கு யாரும் எந்த விதமான பரிசுகளும் தர வேண்டாம் எனவும், இதை வேண்டுகோளாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒருவேளை அன்பால் பரிசு வழங்க நினைத்தால் அதை மாநகராட்சியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கோ வழங்கலாம் எனவும் ஆர்யா ராஜேந்திரன், சச்சின் தேவ் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதுபோல இவர்களின் திருமண அழைப்பிதழிலும் புதுமை புகுத்தியிருந்தனர். அழைப்பிதழ்களில் விருந்தினர்களை அன்புடன் அழைப்பதாக மணமகனின் பெற்றோர் பெயரும், மணமகள் பெற்றோர் பெயரும் இடம்பெறுவது வழக்கம். மணமகளான ஆர்யா ராஜேந்திரன் தரப்பில் வெளியான திருமண அழைப்பிதழில் அனைவரையும் அன்புடன் அழைப்பதாக திருவனந்தபுரம் மாவட்ட சி.பி.எம் செயலாளர் ஆனாவூர் நாகப்பன் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. மணமகன் கே.எம்.சச்சின் தேவ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள திருமண அழைப்பிதழ் கட்சி லெட்டர் பேட் மாடலில் அச்சிடப்பட்டிருந்தது. அதில் கோழிக்கோடு மாவட்ட சி.பி.எம் செயலாளர் மோகனன் மாஸ்டர் அழைப்பதாக அச்சிடப்பட்டிருந்தது.
சி.பி.எம் கட்சியில் சால ஏரியா கமிட்டி உறுப்பினராக இருக்கும் ஆர்யா ராஜேந்திரனுக்கும், கோழிக்கோடு மாவட்ட கமிட்டி உறுப்பினராக உள்ள அச்சின் தேவுக்கும் கட்சி நிர்வாகிகள் மாலை எடுத்துக் கொடுத்தனர். அந்த மாலையை இருவரும் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
இதில் முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள் என முக்கிய பிரமுகர்கள் மட்டுமே வந்திருந்தனர். கணவர் சச்சின் தேவின் வீடு கோழிக்கோடு என்றாலும் திருவனந்தபுரம் மேயர் பொறுப்பை கவனிப்பதில் எந்த சுணக்கமும் வராது என ஆர்யா ராஜேந்திரன் முன்பு கூறியிருந்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Qvxi2Zn
0 Comments