மேரி ராயை போராளி ஆக்கிய ஊட்டி வீடு; சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை பெற்றுக்கொடுத்த சரித்திரம்!

சமூக செயபாட்டாளர் மேரி ராய்யின் மரணம் கேரள சமூகத்துக்கு பெரும் இழப்பு என சமூக சிந்தனையாளர்கள் கலங்குகின்றனர். எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராயின் தாயார் என்பதைத் தாண்டி அளப்பரிய செயற்பாட்டாளராக அறியப்பட்டிருக்கிறார் மேரி ராய்.

கேரளாவில் இப்போது ஜெண்டர் நியூட்ரல் பற்றி அதிகம் விவாதிக்கபட்டு வருகிறது. பள்ளிகளிலும் ஆண், பெண் பேதத்தை ஒழிக்கும் விதமாக சமத்துவ சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆண், பெண் சமத்துவத்துக்கான போராட்டத்தை 1984-ம் ஆண்டே முன்னெடுத்தவர் மேரி ராய்.

ப்ரிட்டிஷ் அரசின் விவசாயத்துறையில் உயர் அதிகாரியாக இருந்தார் மேரி ராயின் தந்தை ஐசக். மேரி ராய் பிறந்தது கேரளத்தின் கோட்டயம். ஆனால், தந்தை பணிபுரிந்த டெல்லியில் ஆரம்ப கல்வி கற்றார். பின்னர் ஊட்டியில் உள்ள வீட்டில் வசித்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்தார். அப்போது தந்தையும், தாயும் பிரிந்துவிட்டனர். தந்தை பெரும் பணக்காரராக இருந்தும் கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்ததாக மேரி ராய் ஒருமுறை கூறியிருக்கிறார்.

மேரி ராயுடன் அருந்ததி ராய்

பின்னர் மூத்த சகோதரன் ஜார்ஜ் துணையுடன் கல்கத்தாவில் ஒரு கம்பெனியில் செயலாளராக பணியில் சேர்ந்தார். அங்குதான் ராஜிவ் ராய்-யை சந்தித்தார். அவரையே திருமணமும் செய்துகொண்டார். ராஜிவ் ராயின் மதுப்பழக்கம் காரணமாக குடும்பத்தில் பிரச்னை வளர்ந்தது. தனது பிள்ளைகளான அருந்ததி ராய், லலித் ராய் ஆகியோருடன் கணவனின் வீட்டைவிட்டு வெளியேறினார் மேரி ராய். அப்போது அருந்ததி ராய்க்கு 3 வயது, லலித் ராய்க்கு 5 வயது. பின்னர் சகோதரனுடன் ஊட்டிக்கு சென்று வசித்தார். அங்கு தனது சகோதரன் ஜார்ஜ் மூலம் பிரச்னை ஏற்பட்டது. மேரி ராயையும் சேர்த்து அவருடன் பிறந்தவர்கள் 4 பேர். எனவே ஊட்டியில் உள்ள சொத்து 4-ஆக பிரிக்கப்பட்டது. அதில் அருந்ததி ராய்க்கு கிடைத்த வீட்டை விற்பனை செய்து அந்த பணத்தில் 1960-களில் கோட்டயதில் பள்ளிக்கூடம் என்ற கல்வி நிறுவனத்துக்கான ஐந்தரை ஏக்கர் நிலத்தை வாங்கினார்.

ஊட்டியில் உள்ள தனது தந்தையின் வீட்டில் பங்கு கிடைத்தது. ஆனால் கேரளாவில் உள்ள தனது சொத்தில் மேரி ராய்க்கு பங்கு கிடைக்கவில்லை. அது ஏன் என விசாரித்தபோது, 1916-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கிறிஸ்தவர்கள் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட சட்டம் அதற்கு தடையாக இருந்தது. திருவிதாங்கூர் சிரியன் கிறிஸ்தவ வாரிசு உரிமை சட்டம் 1916, கொச்சி கிறிஸ்தவ வாரிசு உரிமச் சட்டம் 1925-படியும் தந்தை இறந்த பிறகு அவரது சொத்துகள் மகனுக்கு மட்டுமே சொந்தமாகும் என்ற சட்டம் இருந்தது. திருமணத்தின்போது வரதட்சணைக்காக செலவு செய்வது மட்டும் போதாதா, சொத்தில் பங்கும் வேண்டுமா என பெண்களுக்கு எதிராக அடக்குமுறை இருந்த காலகட்டம் அது.

சமூக செயற்பாட்டாளர் மேரி ரய்

அதனால் கேரளாவில் உள்ள சொத்துக்களில் பங்கு தர முடியாது என மேரி ராயின் சகோதரன் வாதிட்டார். இதையடுத்தே பெண்ணுரிமைக்கான சட்டப் போராட்டத்தை கையில் எடுத்தார் மேரி ராய். இது தொடர்பாக 1984-ல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சுப்ரீம் கோர்ட் வரை சென்று 1986 பிப்ரவரி மாதம் 24-ம் தேதி சரித்திர புகழ்மிக்க தீர்ப்பையும் பெற்றார் மேரி ராய். பெற்றோரின் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டம் 1951-ம் ஆண்டு முதல் செல்லுபடியாகும் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

மேரி ராய் போராடிய சமயத்தில் அவருடைய சமூகமே அவரை ஆதரிக்கவில்லை. ஆனாலும் மனம் தளராமல் தனி ஆளாக நின்று போராடினார். அதனால்தான் கேரளத்தில் பாலின சமத்துவத்துக்கு வித்திட்டவர் மேரி ராய் எனக் கொண்டாடுகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். அதன் பிறகு மேரி ராய் செய்த செயல் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. குடும்ப சொத்தில் பெண்ணுக்கும் உரிமை உண்டு என சட்டப்போராட்டம் மூலம் வெற்றிபெற்ற மேரி ராய் தனது பங்கு சொத்துக்களை சகோதரனுக்கே கொடுத்துவிட்டார். "நீதிக்காகத்தான் நான் போராடினேன். வெறும் சொத்துக்காக நான் போராடவில்லை" என தனது நிலைப்பாட்டையும் அப்போது தெரிவித்து மக்கள் மனதில் உயர்ந்து நின்றார் மேரி ராய்.

சுப்ரீம் கோர்ட்

தாத்தா ஜான் குரியன் கோட்டயத்தில் ராவ் பகதூர் ஜான் குரியன் ஸ்கூலை நடத்தி வந்தார். அதன் அடிப்படையில் கோட்டயத்தில் 'பள்ளிக்கூடம்' என்ற ஸ்கூலை தொடங்கினார். மற்ற பள்ளிகளைப் போல் அல்லாமல் மாணவர்களுக்கு நிறைய சுதந்திரங்கள் வழங்கப்பட்டன. "சுதந்திரமாக இருக்க விடுவதால் மட்டுமே உங்கள் மகன்களும் மகள்களும் முன்னேறுவார்கள் என்பதை நான் உறுதியாக உணர்கிறேன். அதற்கு என் அருந்ததி ஒரு உதாரணம்” என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். சுதந்திரத்தைப் போன்று பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளித்தார் மேரி ராய். கோட்டயம் ரயில் நிலைய கழிவறையில் ஒரு பெண் குழந்தை கொலைச் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் கழிப்பறைக்கு நுழையும் முன்பு தன் பின்னால் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு செல்லுங்கள் என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் மேரி ராய். தனது பள்ளிக்கூட மணவிகளுக்கு தற்காப்புகலை சொல்லிக்கொடுத்தார்.

பெண்களுக்கு போராட்ட குணத்தையும், போராடுவதற்கான சட்ட வழிமுறையையும் கற்பித்தவர் மேரி ராய்.



from தேசிய செய்திகள் https://ift.tt/XzdNv26

Post a Comment

0 Comments