பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் நாவல், கல்கி அவர்கள் எழுதிய தமிழ் புதினமாகும். 1950 முதல் 1955 ஆண்டு வரை கல்கி என்ற வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.
பொன்னியின் செல்வன் நாவல் பொருளடக்கம்
- முதல் பாகம் - புது வெள்ளம்
- இரண்டாம் பாகம் - சுழற்காற்று
- மூன்றாம் பாகம் - கொலை வாள்
- நான்காம் பாகம் - மணிமகுடம்
- ஐந்தாம் பாகம் - தியாக சிகரம்
இந்த கதைக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்து அடுத்த அடுத்த வருடங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.
மேலும் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கிலிருந்த சோழப் பேரரசைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த புதினம் முழுவதும் உண்மை இல்லை என்றாலும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கல்கி அவர்கள் தன்னுடைய கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டு புதினத்தை எழுதி இருப்பார்.
கடந்த 65 ஆண்டுகளாக பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்க முயற்சிகள் நடந்துகொண்டே இருந்தன.
மறைந்த முதல்வர் எம் ஜி ஆர் தொடங்கி பலர் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் எதுவும் கைகூடவில்லை. சிலர் தீவிரமாக முயன்று அதற்கான பணிகளைத் தொடங்கியபோது, காலில் இடறும் கல் மாதிரி ஏதாவது ஒரு தடை ஏற்பட்டு பட வேலைகள் நின்றுபோனதாக அறிகிறேன்.
இந்நிலையில், இத்தனை ஆண்டுகால கனவை இயக்குநர் மணிரத்னம் நனவாக்கி உள்ளார்.
இந்தப் படத்தை உருவாக்கியது பெரும் சாதனை, என்கிறார் ரவிவர்மன்.
சில ஆண்டுகளுக்கு முன்பே ‘பொன்னியின் செல்வன்’ படம் தொடர்பான வேலைகளைச் சத்தமின்றித் தொடங்கிவிட்டாராம் மணி ரத்னம்.
அச்சமயம் அவரிடம் இருந்து வந்த குறுந்தகவலில் ஒரு படம் செய்யலாமா... நாம் சந்திக்கலாமா என்று கேட்டிருந்தாராம்.
ரவிவர்மனும் நேரில் செல்ல வேறு ஒன்றுமில்லை. "பொன்னியின் செல்வன்" படத்தை எடுக்கப் போகிறோம். இரண்டு பாகங்களாகப் படத்தை முடிக்கிறோம்.
நீங்கள்தான் ஒளிப்பதிவாளர் என்றார். அது சற்றும் எதிர்பார்த்திராத இன்ப அதிர்ச்சி.
அடுத்தடுத்து படப்பிடிப்பிற்கான திட்டங்கள் கச்சிதமாகப் போடப்பட்டன. 130 நாள்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தாய்லாந்து காடுகள், நீர்நிலைகள், குகைகளில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சிரமமானது.
நடிகர்கள், படப்பிடிப்புக் குழுவினர் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, பிறகு நடந்தோ, படகுகளிலோ படப்பிடிப்பு நடக்கும் இடத்தைச் சென்றடைய வேண்டும்.
அங்கேதான் கடல் காட்சிகள், சண்டை, பாடல் காட்சிகளும் எடுக்கப்பட்டன. அப்போதுதான் கொரோனா முதல் அலை வந்தது.
சென்னை திரும்பினோம். மணி சார் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வசனங்களையும் காட்சிகளையும் மேலும் கூர் தீட்டினார்.
இந்தப் படத்துக்காக நடிகர்கள் பெரிதும் மெனக்கெட்டுள்ளனர். நடிகர் கார்த்தி குதிரை ஏற்றத்தில் கைதேர்ந்தவராகிவிட்டார்.
நூறு கிலோ மீட்டர் ஓடும் குதிரைகளைஎல்லாம் அவர் குழந்தை மாதிரி பழக்கி வைத்திருந்தார். ஒருமுறை பெரும் வேகத்தில் வரும்போது குதிரையின் பிடி சற்று விலகி கீழே விழுந்து விட்டார். நல்லவேளை,
பின்னியிருந்த கால்கள் விலகிவிட்டதால் சிராய்ப்புகளோடு தப்பித்தார். ஆனால் அவர் வந்த குதிரை, கேமராவின் பக்கத்தில் இருந்த நாற்காலியை உடைத்து விட்டுப்போனது.
மற்றொரு சமயத்தில் நடிகர் விக்ரம் காலை ஏழு மணிக்கு குதிரையில் ஏறி அமர்ந்தவர் மாலை ஆறு மணி வரை இறங்கவில்லை.
மிகவும் முக்கியமான அந்தக் காட்சியில் மூழ்கிவிட்டார்.
ஜெயம் ரவிக்கு யானையின் மீது வருவதுபோல் காட்சிகள் இருந்தன. வேகமாக ஓடும் யானையில் மெல்லிய ஆடையுடன் அமர்ந்திருப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. மிகுந்த துணிச்சல் தேவை என்கிறார் ரவிவர்மன்.
0 Comments