உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவை அடுத்த பனியா கெரா கிராமத்தில் வசித்து வந்தவர் பஜ்ரங்கி (55). சாதுவான இவர் கை வண்டியில் அந்தப் பகுதியில் அழகு சாதனப் பொருள்களை விற்பனை செய்துவந்தார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில், கான்பூர் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அவுராஸ் பகுதியில், பஞ்சர் பழுதுபார்க்கும் கடையில் விஷப் பாம்பு ஒன்று புகுந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அங்கு கூட்டம் கூடியிருக்கிறது. அந்தப் பாம்பைக் கொல்வதற்கு கடைக்காரர் கட்டையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றிருக்கிறார். அப்போது அந்தப் பகுதிக்கு பொருள்களை விற்றுவந்த பஜ்ரங்கி சாது, பஞ்சர் கடைக்காரரிடம் ``பாம்பைக் கொன்று பாவத்தை ஏன் சம்பாதிக்கிறீர்" எனக் கேட்டு, கடையில் நுழைந்து, ஒரு பெட்டியில் அந்தப் பாம்பை பிடித்து வந்தார்.
வெளியே வந்த அந்த துறவியை பார்த்த சுற்றியிருந்தவர்கள், அந்தப் பாம்பை காண்பிக்க கேட்டிருக்கிறார்கள். துறவியும் பாம்பை காண்பிக்க, சிலர் வீடியோ எடுக்க தொடங்கியிருக்கிறார்கள். அதனால், துறவியும் பாம்பை தோளில், கழுத்தில் என பல விதங்களில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். அப்போது திடீரென அந்த விஷப்பாம்பு அவரைத் தீண்டியிருக்கிறது. அதையடுத்து மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி துறவி இறந்துவிட்டார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/yvY9HSe
0 Comments