உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள துல்ஹெபூர் என்ற இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்த மசூதி இல்லாமல் இருக்கிறது. முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து எதாவது ஒரு வீட்டில் தொழுகை நடத்தினாலும் அதற்கும் கிராமத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடந்த 24-ம் தேதி 26 முஸ்லிம்கள் ஒன்று கூடி அங்குள்ள வீடு ஒன்றில் தொழுகை நடத்தினர். இதற்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த சந்திர பால் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இது குறித்து போலீஸிலும் புகார் செய்தார். அதில் 16 பேரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார் அந்த நபர்.
10 பேர் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அனைவரும் உள்ளூர்க்காரர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அனுமதி இல்லாமல் தொழுகை நடத்தியதற்காக போலீஸார் முதல் தகவல் அறிக்கையையும் பதிவுசெய்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்தவுடன் இது தொடர்பான செய்தி சமூக வலைதளத்தில் வைரலானது. `வீட்டிற்குள் கூட சாமி கும்பிடக்கூடாதா?' என்று சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இது தொடர்பாக வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ``நண்பர்கள், உறவினர்கள் என 26 பேர் ஒரே இடத்தில் கூடுவது பிரச்னையல்ல. நமாஸ் செய்ததுதான் பிரச்னையாகிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இது தொடர்பாக போலீஸார் வெளியிட்டுள்ள செய்தியில், இப்புகாரில் உண்மையில்லை என்றும், அது போன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். தொழுகை நடத்தப்பட்டதற்கு எந்த வித ஆதாரமும் இல்லாததால் வழக்கு மூடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ECdmxsL
0 Comments