"அந்தமான் சிறையில் இருந்தபோது 'புல் புல்' பறவையில் ஏறி அமர்ந்து சாவர்க்கர் தாய்நாட்டை தரிசிக்க வருவார்" என்று கர்நாடக மாநில எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சாவர்க்கர் குறித்து இடம்பெற்றிருப்பது கர்நாடகம் தாண்டி தேசிய அளவில் சர்ச்சைகளையும், விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. 'இதனை புலமை நயத்துடன் பார்க்கவேண்டும்' என்று கர்நாடக பாடநூல் வடிவமைப்புத் தலைவர் கவிதை நயத்தோடு விளக்கம் அளித்திருந்தாலும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. இதுகுறித்து, கர்நாடகா அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய, 'கர்நாடக சலுவாலி வட்டாள் பக்ஷா' அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜிடம் பேசினோம்,
"சித்தூர் ராணி சென்னம்மா, ராணி அப்பக்கா, சங்கொல்லி ராயண்ணா, திப்பு சுல்தான் போன்ற வீரம் செறிந்தவர்கள் வாழ்ந்த மண் இது. பண்டைய காலத்திலிருந்து நவீன காலம்வரை கர்நாடகாவில் ஏராளமான தலைவர்களும் தியாகிகளும் சுதந்திரத்திற்காக பங்களித்துள்ளனர். ஆங்கிலேயரை எதிர்த்தும் போரிட்டுள்ளார்கள். நவீன காலத்தில், கே.சி ரெட்டி, நிஜலிங்கப்பா, பசவலிங்கப்பா மாதிரி ஏராளமான தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்காகப் பாடுபட்டுள்ளார்கள். கே.சி ரெட்டி கர்நாடகாவின் முதல் முதலமைச்சர். நிஜலிங்கப்பா கர்நாடகாவில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செய்தவர். காமராஜருடன் நெருக்கமாக இருந்தவர். அதேபோல, இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் குவெம்பு, பி.வி காரந்த், டி.வி குண்டப்பா, பேந்திரே, ராஜரத்தினம், கைலாசபதி, மாஸ்தி மாதிரி இலக்கிய ஆளுமைகள் உள்ளார்கள்.
இவர்களைப் பற்றிய பாடங்களை கைவிட்டுவிட்டு எதற்காக, சாவர்க்கர் பற்றி வைக்கவேண்டும்? அதுவும், பறவையில் யாராவது பறந்து வருவாங்களா? நாட்டில் இந்த மாதிரி கொடுமை வேற எந்த மாநிலத்திலும் இல்லை. கர்நாடகாவுல மட்டும்தான் இந்தக் கொடுமையைப் பார்க்கவேண்டியதா இருக்கு. சாவர்க்கரைப் பற்றி எங்கயும் இப்படி பாடத்தில் வைக்கவில்லை. சமீபத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில், இவரைப் பற்றி சிறப்பிதழ் கொண்டு வந்தார்கள். அதற்குப்பிறகு, கர்நாடகாவுலதான் இப்படியொரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஆர்.எஸ்.எஸும் பாஜகவும் சாவர்க்கரின் இந்துத்துவா கருத்துகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கத் திட்டமிட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர் சாவர்க்கர் மட்டும்தான் என்பதுபோல் பில்டப் செய்கிறார்கள். காந்தியை அழித்து ஒழிக்கலாம். காந்தியை வரலாற்றில் இருந்து இல்லாமல் செய்யலாம் என்று நினைப்பது ஒருநாளும் நடக்காது. காந்தியை எப்போதும் பின்னாடித் தள்ள முடியாது. காந்திதான் நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார். அவர், இல்லன்னா சுதந்திரம் கிடைத்திருக்காது என்பது இந்த நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒருவரை மறைக்கும் வேலையில்தான் பாஜக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அதேபோல, கர்நாடகாவில் எதற்காக புதியக் கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளார்கள். எனக்குத் தெரிஞ்சி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவுலல்லாம் எங்கயுமே இதை ஏத்துக்கல. கர்நாடகா மட்டும்தான் இப்படி. இதெல்லாம் எங்கக் கொண்டுபோய் விடும்னு தெரியலை. ஆனா, ஒன்னு மட்டும் சொல்வேன். கர்நாடகாவில் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ் கனவுகள் நிறைவேறாது. பாஜக திட்டங்கள் எங்களிடம் பலிக்காது" என்கிறார் ஆக்ரோஷமாக!
from தேசிய செய்திகள் https://ift.tt/jOSXEwu
0 Comments