மத்தியப் பிரதேசத்தில், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி அகில இந்திய மில்லி கவுன்சில் (AIMC) எனும் அமைப்பு தனது முதல் மாநாட்டை நடத்தியது. இந்த மாநாடு போபாலிலுள்ள இக்பால் மைதானத்தில் நடத்திய அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் 300-க்கும் மேற்பட்டோர் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தை தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஆரிப் மசூத் நடத்தினார்.
அதில் நீதி, அமைதி மற்றும் நமது பொறுப்புகள் என்ற தலைப்பில் ஆரிப் மசூத், பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சேபிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 2016-ம் ஆண்டு பேசியதற்கு, அப்போது சமாஜ்வாடி கட்சியிலிருந்த, ஷம்சுல் ஹசன் பல்லி என்பவர் புகார் அளித்திருந்தார். இவர் தற்போது சனுக்தா சங்கர்ஷ் மோர்ச்சா எனும் அமைப்பின் மாநிலத் தலைவராக இருக்கிறார்.
அந்தப் புகாரில் அவர், ``எங்கள் பிரதமரை மேடையில் அசிங்கப்படுத்திய ஆரிப் மசூத்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், அரசியலமைப்பைவிட பெரியவர் யாரும் இல்லை. மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். அவர்மீது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், தனது புகாரை ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் மாநில அரசு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தார். இந்த நிலையில், போலீஸார் இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.
இது குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி, "இது நிர்வாகச் செயல்பாடு. சட்டம் அதன் கடமையைச் செய்யும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். 6 வருடங்கள் ஆனாலும், இது போன்ற குற்றங்களை அலட்சியமாக விடமுடியாது" எனக் குறிப்பிட்டார்.
மேலும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ், “அந்தக் கூட்டத்தின் மேடையில் ஏராளமானோர் கலந்துகொண்டு உரையாடினார்கள். அதில் ஆரிப் மசூத் மட்டும் குறிவைக்கப்பட காரணம், அவர் காங்கிரஸின் தற்போதைய எம்.எல்.ஏ என்பதால்தான். இது எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதற்கான ஒரு வழி. இந்த பழிவாங்கும் கொள்கை தொடர்ந்தால், அவர்கள் மீண்டும் மக்களால் உதைபடுவார்கள்" எனத் தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/haUrQgu
0 Comments