மும்பை: டுடோரியலில் ரூ.1.27 கோடி மோசடி... சொந்த வீடு, மனைவிக்கு நகை வாங்கிக் குவித்த ஊழியர்

மும்பையில் மகேஷ் டுடோரியல் மிகவும் பிரபலமாகும். இங்கு டியூஷன் படிக்க மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதுண்டு. இந்த நிறுவனத்தில் ஹர்ஷத் கபுலே என்பவர் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தார். டுடோரியல் நிர்வாகம் சமீபத்தில் நிதி தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்தபோது பணத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. உடனே இது குறித்து விசாரிக்கும்படி நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணைக்காக ஹர்ஷத் அழைக்கப்பட்டார். அவர் ரூ.50 லட்சத்தை கடந்த மே மாதம் வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருப்பதாகவும், அது குறித்து தெரிவிக்க மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார். உடனே அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி நிர்வாகம் தரப்பில் கேட்கப்பட்டது. ஹர்ஷத்தும் வங்கியில் வைப்பு தொகை வைக்கப்பட்டதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அந்தப் பணத்தை எடுத்து ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுக்கும்படி நிர்வாகம் தரப்பில் ஹர்ஷத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மகேஷ் டுடோரியல்ஸ்

அவரும் சரி என்று சொல்லிவிட்டுச் சென்றவர், அதன் பிறகு வேலைக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து விசாரித்தபோது மே, ஜூலை மாதங்களில் தலா 50 லட்சம் ரூபாய் வங்கியில் வைப்பு தொகை வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் மே மாதம் வைப்பு தொகையாக வைத்தப் பணத்தை ஹர்ஷத் எடுத்து வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றியிருப்பதும் தெரியவந்தது. மேலும் தீவிரமாக கணக்குகளை ஆய்வு செய்தபோது மொத்தம் ரூ.1.27 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ஹர்ஷத்தை அழைத்து விசாரித்தபோது பணத்தை திரும்பக் கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். அதோடு இது குறித்து போலீஸில் புகார் செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். கம்பெனியின் நிதி மேலாளர் உட்பட மற்றவர்களின் போலி கையெழுத்தை போட்டு பணத்தை கையாடல் செய்திருந்தார். ஆனால், பணத்தை திரும்பக் கொடுக்கும்படி பல முறை எச்சரித்தும் பணத்தை அவர் கொண்டு வந்து கொடுக்கவில்லை.

இதையடுத்து ஹர்ஷத்துக்கு எதிராக டுடோரியல் நிர்வாகம் மும்பை முலுண்ட் போலீஸில் புகார் செய்தது. ஹர்ஷத் தான் மோசடியாக சம்பாதித்தப் பணத்தில் சொந்த வீடு வாங்கியிருந்தார். அதோடு மனைவிக்கு 9 லட்சத்துக்கு தங்க நகைகளும் வாங்கியிருந்தார். மோசடிப் பணத்தை தன் மனைவி மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஹர்ஷத் மாற்றியிருந்தார். எனவே இந்த மோசடியில் அவர் மனைவியையும் டுடோரியல் நிர்வாகம் குற்றவாளியாக சேர்த்திருக்கிறது. ஹர்ஷத் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/WdYGtBQ

Post a Comment

0 Comments