சவால் நிறைந்த பல துறைகளில் பெண்கள் அசாத்திய சாதனைகளைப் படைத்து, நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து வரும் வேளையில், தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பெண்கள் பணியாற்றும் சதவிகிதம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் கால விடுப்பு எனப் பல காரணிகளால் பெண்களை பணிக்கு அமர்த்த நிறுவனங்கள் தயக்கம் காட்டும் நிலையில், ஹெச்டிஎஃப்சி வங்கி, பெண்கள் மட்டும் பணிபுரியும் தனி வங்கிக் கிளையை நிறுவி, பாலின பன்முகத்தன்மையை நிலைநாட்டி உள்ளது.
கேரளாவின் கோழிக்கோட்டில் ஹெச்டிஎஃப்சி வங்கி, நான்கு பெண் வங்கிப் பணியாளர்களுடன் மகளிருக்கான பிரத்யேக கிளையை நிறுவி உள்ளது. இக்கிளையை கோழிக்கோடு மாநகராட்சி மேயர் பீனா பிலிப் திறந்து வைத்தார்.
பெண்கள் மட்டும் பணியாற்றும் வங்கிக் கிளை திறப்பு குறித்து ஹெச்டிஎஃப்சி வங்கியின் தெற்கு மண்டலத் தலைவர் சஞ்சீவ் வெளியிட்ட அறிக்கையில், பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மைக்கான முன் முயற்சிகள் அனைத்தையும் ஹெச்டிஎஃப்சி வங்கி எடுத்து வருவதாகவும், அதன் அடிப்படையிலேயே பெண்கள் மட்டும் பணியாற்றும் தனி வங்கிக் கிளை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஹெச்டிஎஃப்சி வங்கியில், பெண்களை ஆதரிப்பதற்கும், அவர்களின் தனித்துவமான சவால்களை கவனத்தில் கொண்டும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சூழலை பெண்களுக்கு வழங்குவதற்கும் அயராது உழைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த மார்ச் மாத நிலவரப்படி, ஹெச்டிஎஃப்சி வங்கியில், 21.7 சதவீதம் பெண்கள் பணியாற்றி வருவதாகவும், வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்துவதை தங்களது நிறுவனத்தின் இலக்காக வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனியார் வங்கியின் மகளிர் மட்டும் பணிபுரியும் கிளை திறக்கப்பட்ட முயற்சி, பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/G3EKuBr
0 Comments