வரதட்சணை கொடுமை; மருமகளை சேர்க்க மறுத்த மாமியார்... விரைந்த `புல்டோசர்' - என்ன நடந்தது?

வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்றாலும்கூட, இன்னும்கூட வரதட்சணை கலாசாரம் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. வசதியிருப்பவர்கள் அதனை சுமுகமாக எந்தவித சிரமுமின்றி கடந்து செல்கையில், பெரும்பாலான கிராமங்கள், ஏன் நகரங்களில்கூட பலர் வரதட்சணை கொடுமையால் அவதிப்படுவதை ஊடகங்களில் நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இதில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடி சட்டப்படி நீதி பெற்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் பிறகான வாழ்வென்பது நிம்மதியாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

வரதட்சணை கொடுமை

அப்படியான ஒரு சம்பவம்தான், உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. ஆனால், அதற்கு போலீஸ் எடுத்த நடவடிக்கை பலரையும் பாராட்டச்செய்திருக்கிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிஜ்னூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நூதன் மாலிக்-ராபின் சிங் தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது. இருப்பினும் திருமணம் ஆனதிலிருந்தே அந்தப் பெண் தன்னுடைய மாமியாரால் வரதட்சணை கொடுமை அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வரதட்சணை கொடுமையை எதிர்த்து, 2019-ல் நீதிமன்றத்தை நாடியதில், கணவர் ராபின் சிங் சிறைக்குச் சென்றார். ஆனால், அதன்பிறகு அந்தப் பெண்ணும் மாமியாரால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

புல்டோசர்

இந்த விவகாரத்தில் பெண்வீட்டார் பலமுறை சமரசம் செய்ய முயன்றும் அது வீணாக, இறுதியில் அந்தப் பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் நீதிமன்றமும், அந்தப் பெண்ணை தகுந்த பாதுகாப்போடு மாமியார் வீட்டில் கொண்டுசேர்க்குமாறு போலீஸுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து போலீஸும் அந்தப் பெண்ணின் மாமியார் வீட்டுக்குச் சென்று பேசியிருக்கின்றனர். ஆனாலும், அந்தப் பெண்ணின் மாமியாரோ தொடர்ந்து அவரை ஏற்க மறுத்து வந்திருக்கிறார். அதையடுத்து, இந்த விவகாரத்தில் போலீஸார் சமரசமாகாத மாமியாரின் வீட்டு கேட்டை புல்டோசரைக் கொண்டுவந்து இடித்து அவரை எச்சரித்திருக்கின்றனர். இந்த நடவடிக்கையைக் கண்டு பதறிய அவர், தன் மருமகளை வீட்டில் சேர்த்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட்ட நிகழ்வுகள் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/QF2wbng

Post a Comment

0 Comments