கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜ.க யுவமோர்ச்சா மாவட்டச் செயலாளராக இருந்த பிரவீன் நெட்டாரு நேற்று இரவு தனது கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து, கோடாரி, வாளால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து பெல்லாரி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீன் நெட்டாருவின் கொலைக்கு எதிராக பா.ஜ.க உறுப்பினர்கள் பலர் இரவிலிருந்து தெருவில் அமர்ந்து குற்றவாளியை விரைவில் கைது செய்ய ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், "தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் கட்சித் தொண்டர் பிரவீன் நெட்டாரு காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். பிரவீனின் ஆத்மா சாந்தியடையட்டும். இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை அவரின் குடும்பத்தாருக்கு இறைவன் வழங்கட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Fvn7L2d
0 Comments