முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக எடுக்கப்பட்ட ஆவணப்படத்தின் எதிரொலியாகவே கடந்த 2011-இல் தேனி மாவட்டத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து 40 நாள்கள் நடந்த போராட்டத்தால் கேரளாவுக்கு செல்லும் இறைச்சி, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தடைபட்டன. இதையடுத்து கேரள அரசு முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பின்வாங்கியதால் தேனியில் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் மழைகாலத்தின் போது கேரள அரசியல்வாதிகள் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக ஏதேனும் சர்ச்சையை கிளப்பி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு ப்ரித்விராஜ் உள்ளிட்ட கேரள திரைப்பிரபலங்களும் அணைக்கு எதிராக சமூகவலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்தனர்.
இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான கருத்துகளை கேரள மக்களிடம் பரப்பி தொடர்ந்து பீதியை ஏற்படுத்தி வருபவர் கேரள வழக்கறிஞர் ரசல் ஜோய். இவர் முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது எனவும், அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக தனியாக அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், Decommission Mullaperiyar or Demolished Mullaperiyar என்று அட்டவணை இடப்பட்ட பத்திரத் தாளில், பிரதமர் மோடிக்கு 10 லட்சம் கையெழுத்தை அனுப்பும் இயக்கத்தை ரசல் ஜோய் ஆரம்பித்துள்ளார். தற்போது வரை 8 லட்சத்து 44 ஆயிரத்து 85 பேரிடம் கையெழுத்து வாங்கி விட்டதாக சமூகவலைதளங்களில் கூறி வருகிறார்.
மேலும் முல்லைப் பெரியாற்றின் விவரங்கள் குறித்த 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்றை எடுக்க இருப்பதாகவும், இதற்காக 30 லட்சம் ரூபாய் தேவை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த ஆவணப்படம் வரவிருப்பதாகவும் கூறி கேரளாவில் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக எடுக்கப்பட்ட ஆவணப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக பெரும் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் கேரளாவில் மீண்டுமொரு ஆவணப்படும் எடுக்கவும், அணைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி வருவதால் தமிழகத்தில் முல்லைப்பெரியாறு அணையை நம்பியுள்ள ஐந்து மாவட்ட விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். "முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக ஆவணப்படும் எடுக்க கனரா வங்கியின் ஆலுவா வங்கி கிளையில், கணக்கு எண்- 11 00 56 00 73 45 , அனீஸ் மார்ட்டின் ஜோசப் மற்றும் ரசல் ஜோய் ஆகிய இருவரின் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஆவணப்படம் எடுப்பதற்காக 30 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், முல்லைப் பெரியாறு அணையினால் ஏற்படவிருக்கும் பேரழிவிலிருந்து கேரளாவில் உள்ள 40 லட்சம் மக்களை காப்பதற்காக, பணத்தை அள்ளித் தருமாறு சமூக வலைதளங்களில் மேற்பட்ட கனரா வங்கி கணக்கு பரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக விஷமப் பிரசாரம் செய்து வரும், இந்த வழக்கறிஞர் ரசல் ஜோய், ஒரு அமைப்பையும் ஆரம்பித்து வங்கி கணக்கு மூலமாக லட்ச கணக்கில் வசூல் செய்ய திட்டமிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று கடந்த 2006 மற்றும் 2014 -ம் ஆண்டுகளில் இரண்டு தீர்ப்பை, தெளிவாக கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, ரசல் ஜோய் நடத்தி வரும் இந்தப் பிரசாரத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து மேற்கண்ட வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய வேண்டும். தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக விஷமப் பிரசார செய்யும் கும்பலை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேணடும்.
இல்லையென்றால் விரைவில் தேவிகுளம், பீர்மேடு மற்றும் உடும்பஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களையும் தமிழகத்தோடு சேர்க்கச் சொல்லி தென் தமிழகத்தில் பிரசார இயக்கத்தை தொடங்குவோம். நிலவியல் ரீதியாக மேற்கண்ட மூன்று தாலுகாக்களும், 1956-ம் ஆண்டுக்கு முன்னால் அப்போதைய மதுரை மாவட்டம், பெரியகுளம் தாலுகாவோடு இணைந்திருந்த பகுதிகள்தான். அதனடிப்படையில் மூன்று தாலுகாக்களின் மீதும் உரிமை கோருவதற்குத் தமிழகத்திற்குத் தார்மீக உரிமை இருக்கிறது".
தமிழக முதல்வர் இதுகுறித்து கேரள முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தி முல்லைப்பெரியாறு அணைக்கு எதிரான விஷமப் பிரசாரங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/5bPEWav
0 Comments