``என்னை விசாரித்த அமலாக்கத்துறை பினராயி விஜயனை ஏன் விசாரிக்கவில்லை?" - ராகுல் காந்தி கேள்வி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன் தினம் கேரளா வந்தார். சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பினரால் தாக்கப்பட்ட வயநாடு கல்பற்றாவில் உள்ள தனது எம்.பி அலுவலகத்தை பார்வையிட்டார் ராகுல் காந்தி. பின்னர் பேரணி பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிவருகிறார். பா.ஜ.க., சி.பி.எம் கட்சிகளையும், பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரையும் கடுமையாக விமர்ச்சித்து வருகிறார் ராகுல். நேற்று மலப்புரம் மாவட்டம், வண்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசுகையில், ``என்னிடம் ஐந்து நாள்கள் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை. பா.ஜ.க, சி.பி.எம் கட்சிகளிடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதையே இது காட்டுகிறது.

பொதுக்கூட்டத்தில் பேசும் ராகுல் காந்தி

பஃபர் சோன் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை முதல்வர் பினராயி விஜயன் நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்த மாநில அரசு முயல்கிறது. ஆனால், விவசாயிகள், சாதாரண மக்களின் பக்கம் காங்கிரஸ் கட்சி நிற்கும். எனது அலுவலகத்தை எத்தனை முறை உடைத்து, தகர்த்தாலும் எனக்கு அவர்களிடம் வருத்தமோ, கோபமோ இல்லை" என்றார்.

ராகுல் காந்தி சாப்பிட்ட பக்கோடா, குடம்குலுக்கி சர்பத், சட்னி

சுற்றுபயணத்தின்போது வயநாடு கோலியாடி பகுதியில் பிரோஸ் என்பவர் குடும்பத்தினருடன் நடத்திவரும் சிறிய கூல்பாருக்குச் சென்ற ராகுல் காந்தி, சூடான பக்கோடாவை சட்னியுடன் சேர்த்து ருசித்தார்.

பக்கோடா சாப்பிடும் ராகுல் காந்தி

பின்னர் குடம்குலுக்கி சர்பத் குடித்தார். அத்துடன் நிற்காமல், தான் சாப்பிட்ட அனுபவத்தை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் ராகுல் காந்தி நாளை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/u8OQVm7

Post a Comment

0 Comments