434 மீட்டர் நீளம், 5 கிலோ எடை, 12 மணிநேரம் - அண்ணனுக்காக கடிதம் எழுதிய தங்கை... காரணம் இதுதான்!

கடந்த மே மாதம் 24ம் தேதி சர்வதேச அளவில் சதோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் வைப்பது, போட்டோக்களைப் பதிவிட்டு வாழ்த்து தெரிவிப்பது எனப் பல்வேறு வகையில் தங்கள் சதோதரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணப்ரியா என்பவர் தனது அண்ணனுக்கு எழுதிய கடிதம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணமாகி கேரளாவில் உள்ள முண்டக்காயம் என்னும் கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணப்ரியா வேலைப்பளு காரணமாக சதோதரர்கள் தினத்தன்று தனது அண்ணன் கிருஷ்ணபிரசாத்துக்கு வாழ்த்து தெரிவிக்க மறந்துவிட்டார். இதனால் கோபித்துக்கொண்ட கிருஷ்ணபிரசாத், மற்ற சதோதர நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்துத் தன் தங்கை கிருஷ்ணப்ரியாவிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி, வாழ்த்து ஏதும் தெரிவிக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் கோபத்துடன் தன் தங்கையை வாட்ஸ்அப்பில் பிளாக் செய்து தொலைபேசி அழைப்புகளையும் எடுக்காமல் இருந்துள்ளார்.

கிருஷ்ணப்ரியா

எனவே அண்ணனை சமாதானப்படுத்தும் விதமாக 434 மீட்டர் நீளம் கொண்ட 15 காகித ரோல்களை வாங்கி சுமார் 12 மணிநேரம் செலவழித்து தனது அண்ணனின் மீதான அன்பு, சிறுவயது முதல் ஏற்பட்ட சண்டைகள், சமாதானங்கள் என மிகப்பெரிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் கிருஷ்ணப்ரியா. 5 கிலோ எடைகொண்ட இந்தக் கடிதத்தை பார்சல் மூலம் தனது அண்ணனுக்கு அனுப்பியுள்ளார். எதோ பிறந்த நாள் பரிசாக இருக்கும் என்று நினைத்து திறந்து பார்த்த கிருஷ்ணபிரசாத், தங்கையின் பிரமாண்டக் கடிதத்தைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது பற்றிக் கூறிய கிருஷ்ணப்ரியா, "நான் என் அண்ணனுக்குக் சகோதர தின வாழ்த்துக் கூற மறந்துவிட்டேன். வழக்கமாக சகோதர தினத்தன்று அவரைத் தொலைபேசியில் அழைத்தோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ வாழ்த்துத் தெரிவிப்பேன். ஆனால் இந்த முறை நான் பிஸியாக இருந்ததால் மறந்துவிட்டேன். இதனால் என் மீது கோபம்முற்ற அவர் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டு என்னை வாட்ஸ்அப்பில் கூட பிளாக் செய்துவிட்டார். இதனால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். எனவே மிகப்பெரிய காகிதம் வாங்கி சுமார் 12 மணிநேரம் செலவழித்து இந்தக் கடிதத்தை எழுதி அனுப்பினேன்" என்றார்.

கிருஷ்ணப்ரியாவின் இந்த அன்பான செயலைக் கண்டு அவர் உறவினர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/8BkegdR

Post a Comment

0 Comments