கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் போலீஸ் அசோசியேஷன் மாநாடு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கோட்டயம் மாவட்டம், சங்ஙனாச்சேரியில் டிராஃபிக் போலீஸாகப் பணிபுரிந்த நிவாஸ், ஓட்டுநர் பிரசாந்த், சீனியர் சிவில் போலீஸ் ஆபீஸர் ஜிபின் ஆகியோர் திருவனந்தபுரத்துக்குச் சென்றிருக்கின்றனர். திருவனந்தபுரம், கிளிமானூர் மதுக்கடை அருகே சென்றவர்கள் ஒரு வீட்டுக்குச் செல்லும் வாசல் முன் தனியார் பாதையில் சிறுநீர் கழித்திருக்கின்றனர். அதைப் பார்த்த வீட்டின் உரிமையாளரான ரயில்வே ஊழியர் ரெதீஷ், ``என் வீட்டின் முன் ஏன் சிறுநீர் கழிக்கிறீர்கள்" என போலீஸாரைக் கண்டித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த மூன்று போலீஸாரும் சேர்ந்து ரெதீஷை சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். இதில் ரெதீஷின் முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.
இது பற்றி கிளிமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த ரெதீஷ், திருவனந்தபுரம் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்திருக்கிறார். கிளிமானூர் போலீஸார் வழக்கு பதியாமல் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்னையை சமாளித்துவிட முயன்றிருக்கின்றனர். ஆனால், மது குடித்துவிட்டு மூன்று போலீஸாரும் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகவும், எனவே புகாரை வாபஸ் பெற முடியாது எனவும் ரெதீஷ் கூறியிருக்கிறார். எனவே, போலீஸார் மது குடித்திருந்தனரா என்பதை அறிய மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து மூன்று போலீஸ்காரர்கள்மீதும் வழக்கு பதிவுசெய்து அவர்களைக் கைதுசெய்த கிளிமானூர் போலீஸார், பின்னர் ஸ்டேஷன் ஜாமீனில் அவர்களை விடுவித்தனர். இந்த நிலையில், துறை ரீதியான நடவடிக்கையாக கோட்டயம் சங்ஙனாசேரி டிராஃபிக் போலீஸ் நிவாஸ், ஓட்டுநர் பிரசாந்த், சீனியர் சிவில் போலீஸ் ஆபீஸர் ஜிபின் ஆகிய மூன்று போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்கான உத்தரவை கோட்டயம் எஸ்.பி பிறப்பித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZH7xkM3
0 Comments