`தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தல், பதுக்கல், விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்ய வேண்டும். அவர்களின் வங்கிக் கணக்குகள், சட்ட விரோத சொத்துகளை முடக்க வேண்டும்' என டி.ஜி.பி., உத்தரவிட்டிருக்கிறார். இதற்கான நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் கஞ்சா 2.0' என்று பெயர் வைக்கப்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து கஞ்சா கடத்தல், விற்பனை அமோகமாக நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இப்படியான சூழலில் ராமேஸ்வரம் பகுதியில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 நாட்டிகல் தொலைவிலேயே இலங்கை உள்ளதால், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள், தங்கம் போன்றவை இலங்கைக்குக் கடல் மார்க்கமாகக் கடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் வருகைதந்த தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, சிவகங்கை, ராமநாதபுரம் போலீஸ் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு கடலோரக் காவல் படையினருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்தல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுச் சென்றார். ஆனால், போலீஸார் கடத்தல்காரர்களுக்குத் துணையாகச் செயல்பட்டு வருவதாக மீனவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் சூழலில், கடந்த 20 நாள்களில் மட்டும் இலங்கை கடற்படை மூன்று கோடி ரூபாய் மதிப்புடைய 1,200 கிலோ கஞ்சா மற்றும் 1,600 கிலோ பீடி இலையைக் கைப்பற்றி கடத்தல்காரர்களைக் கைதுசெய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலோர காவல் நிலையத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் துணையோடு, கடத்தல்காரர்கள் மிகத் துல்லியமாக தங்களுடைய கடத்தல் சம்பவங்களை திட்டமிட்டு கஞ்சாவைக் கடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வண்ணம் உள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு மர்ம படகுகள் மூலம் கஞ்சா, தடை செய்யப்பட்ட பொருள்களைக் கடத்திச் சென்று, பின்னர் அங்கிருந்து மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், இலங்கை கடற்படையால் கைப்பற்றப்படும் கஞ்சா முழுவதும் கேரளா பகுதியில் உள்ள கஞ்சாவாக உள்ளது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் கஞ்சா தடிமன் குறைவாகவும், கேரளாவில் விளைவிக்கப்படும் கஞ்சா தடிமம் அதிகமாகவும் இருக்கும் என்பதால் அதனை வைத்து இது கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா என்று இலங்கை கடற்படையினர் உறுதி செய்திருக்கின்றனர். கேரளாவிலிருந்து தமிழ்நாடு கடலோரப் பகுதிகளுக்குக் கஞ்சா எப்படி வருகின்றது என்பது குறித்து தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.
தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் கடலோர காவல் படை, இந்தியக் கடற்படையினர் அதி நவீன படகுகளிலும், நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர் கிராஃப்ட் என்று அழைக்கக்கூடிய மத்திய ரோந்து கப்பல்கள் மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் கடத்தல்காரர்கள் இத்தகைய குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவரமறிந்த போலீஸாரிடம் விசாரித்தோம். ``ஏற்கெனவே இதேபோன்று கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்துள்ளோம், தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். டி.ஜி.பி-யின் அறிவுறுத்தலின்படி கஞ்சா வேட்டை தொடர்ந்து வருகிறது. இதில் கடத்தல் பேர்வழிகளுக்கு உடந்தையாக சில போலீஸார் செயல்பட்டு வருவதாகக் கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை" எனத் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குக் கஞ்சா கடத்திவரும் மாஃபியாக்களை விரைந்து கைதுசெய்வதோடு மட்டுமின்றி, அவர்களுக்கு உறுதுணையாக அதிகாரிகள் இருந்தால், அதனை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/uOlyrHM
0 Comments