கேரள மாநில காவல்துறையில் டெலிகம்யூனிகேஷன் எஸ்.பி-யாக இருப்பவர் நவநீத் சர்மா. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். நவநீத் சர்மாவுக்கு டெலிகம்யூனிகேஷன் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றிலிருந்து தலா ஒரு கன்மேன் வீதம் இரண்டு பேர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஆயுதப்படை கன்மேனாக இருந்தவர் ஆகாஷ். ஆகாஷ் பணியிலிருந்த சமயத்தில் நவநீத் சர்மாவின் வீட்டில் வேலை செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கன்மேன் ஆகாஷை அழைத்து, எஸ்.பி வீட்டு நாயைக் குளிப்பாட்ட வேண்டும் எனவும், நாயின் கூண்டுக்குள் கிடக்கும் அதன் கழிவுகளை அகற்ற வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். அதற்கு கன்மேன் ஆகாஷ், ``அது என் வேலை கிடையாது" எனக் கூறி நாயைக் குளிப்பாட்ட மறுத்திருக்கிறார். மேலும் தனது அறையிலிருந்து வரமுடியாது எனவும் கூறியிருக்கிறார்.
இது பற்றி எஸ்.பி நவநீத் சர்மாவின் காதுகளுக்கு கொண்டுசென்றிருக்கிறார் வடமாநில பணியாளர். இதனால் கோபமான எஸ்.பி டெலிகம்யூனிகேஷன் எஸ்.ஐ-யை அழைத்து, ``கன்மேன் ஆகாஷ் எனது வீட்டில் அத்துமீறி நுழைந்து பொருள்களை அடித்து நொறுக்கியதாக ஒரு ரிப்போர்ட் எழுதிக்கொடுங்கள்" எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. உயர் அதிகாரி கூறியதால் வேறு வழி இல்லாமல் பொய் ரிப்போர்ட் எழுதி கொடுத்திருக்கிறார் எஸ்.ஐ. அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் கன்மேன் ஆகாஷை சஸ்பெண்ட் செய்திருக்கிறார் எஸ்.பி நவநீத் சர்மா.
அதையடுத்து தனக்கு நேர்ந்த அநீதி பற்றி கேரள மாநில போலீஸ் அசோஸியேஷனைச் சேர்ந்தவர்களிடம் புகார் அளித்திருக்கிறார் கன்மேன் ஆகாஷ். இது பற்றி போலீஸ் சங்கத்தினர் டி.ஜி.பி-யின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கின்றனர். அதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி ஐ.ஜி அனூப்குருவிளா ஜான் என்பவருக்கு உத்தரவிட்டார். டி.ஜி.பி, ஐ.ஜி நடத்திய விசாரணையில் கன்மேன் ஆகாஷ்மீது தவறு இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து எஸ்.பி நவநீத் சர்மா பிறப்பித்த சஸ்பெண்ட் ஆர்டரை அதே நாளில் ரத்து செய்தார் ஐ.ஜி அனூப்குருவிளா ஜான். மேலும் கன்மேன் ஆகாஷை திருவனந்தபுரம் சிட்டி போலீஸில் பணியமர்த்தினார்.
எஸ்.பி-யின் நாயைக் குளிப்பாட்டி அதன் கழிவுகளை அள்ள மறுத்த கன்மேனின் உறுதியான செயல்பாட்டுக்கு சக போலீஸார் பாராட்டு தெரிவித்தனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/yCTbulc
0 Comments