மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் பணம் சேமிப்பு கிடங்கின் ஏ.சி.ஓட்டை வழியாக ரூ.12 கோடியை திருடிய ஊழியர்!

ஐசிஐசிஐ வங்கிக்கு மும்பை அருகில் உள்ள டோம்பிவலி என்ற இடத்தில் பணத்தை சேமித்து வைத்திருப்பதற்காக ஒரு மையம் இருக்கிறது. டோம்பிவலி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிக்கும் ஏ.டி.எம். மற்றும் வங்கி கிளைகளுக்கு இங்கிருந்துதான் பணம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த மையத்தில் பணம் லாக்கரில் வைக்கப்பட்டு இருந்தது. இதன் பாதுகாப்புக்கு எப்போதும் இரண்டு பேர் பணியில் இருப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டில் சிக்கல் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். உடனே இது குறித்து வங்கியின் தலைமை மேலாளர் தீபக் பதக் டெக்னிக்கல் அணிக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து சோதித்து பார்த்த போது ஹார்டு டிஸ்க் காணாமல் போய் இருந்தது. அதோடு கடந்த சில நாள்களுக்கான வீடியோ அழிக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் உடனே பணத்தை முழுமையாக எண்ணிப்பார்த்த போது ரூ.34 கோடி காணாமல் போய் இருந்தது. இதையடுத்து பணம் இருந்த அறை முழுமையாக சோதித்து பார்த்த போது ஏ.சி.ஓட்டை வழியாக பணம் கொண்டு செல்லப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

சித்தரிப்புபடம்

ஏசியை கழற்றிவிட்டு அதன் வழியாக பணத்தை கொண்டு சென்றுள்ளனர். அதோடு வங்கியின் பண பாதுகாவலராக பணியில் இருந்த அல்தாப் ஷேக் காணாமல் போய் இருந்தார். இருவரில் ஒருவர் விடுமுறையில் இருந்ததால் ஷேக் மட்டும் இரண்டு நாள் தனியாக பணியில் இருந்த போது இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளார். கட்டடம் முழுக்க சோதித்து பார்த்த போது சாக்குமூட்டையில் கட்டி ரூ.22 கோடியை கட்டடத்தின் படிக்கட்டில் போட்டு அதன் மீது தார்பாயை போட்டு வைத்திருந்தனர். இதனால் அந்த பணம் மீட்கப்பட்டது. ரூ.12 கோடி திருடப்பட்டு இருந்தது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷேக்கை தேடி வந்தனர். தீவிர தேடுதலுக்கு பிறகு ஷேக்கும், இத்திருட்டுக்கு உதவிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.5.8 கோடி மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எதற்காக 22 கோடியை அப்படியே விட்டுச்சென்றனர் என்ற மர்மம் நீடித்து வருகிறது. அதோடு எஞ்சிய பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/TvJ0heM

Post a Comment

0 Comments