``100 கோடியோ, 200 கோடியோ அல்ல..!" - ஏழைகளுக்காக உ.பி மருத்துவர் வழங்கியது எவ்வளவு தெரியுமா?

உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஏழைகளுக்கு உதவுவதற்காக மாநில அரசுக்குத் தனது ரூ.600 கோடி மதிப்பிலான சொத்தை நன்கொடையாக அளித்திருக்கிறார்.

தனது சொத்தை நன்கொடையாக வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மருத்துவர் அரவிந்த் கோயல், ``ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் என்னுடைய சொத்தை அளிக்க வேண்டுமென சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்தேன்" என்றார்.

கொரோனா காலகட்டத்தில் மொராதாபாத்தைச் சுற்றியிருக்கும் 50 கிராமங்களைத் தத்தெடுத்த அரவிந்த் கோயல், அந்தக் கிராம மக்களுக்கு இலவச வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து உதவியிருக்கிறார். மேலும், மாநிலத்தில் ஏழைகளுக்கு இலவச கல்வி மற்றும் சிறந்த மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

யோகி

இவர் கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறார். இவரின் மொத்த சொத்தின் மதிப்பு சுமார் ரூ.600 கோடி எனக் கூறப்படுகிறது. அதை மொத்தமாக அவர் நன்கொடையாக அரசுக்கு அளித்திருக்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா தேவி பாட்டீல், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் உள்ளிட்டவர்களால் டாக்டர் கோயல் கௌரவிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் இருக்கின்றனர்.

மருத்துவர் கோயல்

ஏழை எளிய மக்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய 600 கோடி ரூபாய் சொத்தை மருத்துவர் கோயல் அரசுக்கு அளித்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மருத்துவர் கோயல் தன்னுடைய மொத்த சொத்தான ரூ.600 கோடியை நன்கொடையாக வழங்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரின் உண்மையான சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க அரசு தனிக் குழு ஒன்று அமைத்திருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/FWNk6Qs

Post a Comment

0 Comments