Ranji Trophy : "இந்த ஒற்றை கோப்பைக்காக 23 ஆண்டுகள் காத்திருந்தேன்"- பயிற்சியாளர் சந்திரகாந்த்!

41 முறை சாம்பியனான மும்பை அணியை வீழ்த்தி ரஞ்சிக் கோப்பையை முதன்முறையாக வென்றுள்ளது மத்தியப் பிரதேசம். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் ஆகியிருக்கிறது மத்தியப் பிரதேச அணி.

இவ்வெற்றியை அந்த அணி ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதில் இன்னொரு சுவாரஸ்ய விஷயம் ஒன்றும் இருக்கிறது, தற்போது மத்தியப் பிரதேச அணியின் பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட் 1999-ம் ஆண்டு மத்தியப் பிரதேச ரஞ்சி அணியின் கேப்டனாக இருந்தார். அப்போதும் இதே மைதானத்தில்தான் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் 96 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா அணியிடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது மத்தியப் பிரதேசம். இதனால் மிகவும் வருத்தத்துடன் மைதானத்திலிருந்து வெளியேறினார் சந்திரகாந்த்.

Chandrakant Pandit

ஆனால் தற்போது இதே மைதானத்தில் அணியின் பயிற்சியாளராக இருந்து கோப்பையை முத்தமிட்டுள்ளார் சந்திரகாந்த். இந்த நெகிழ்ச்சியானத் தருணம் பற்றிக் கூறியஅவர் ," 23 ஆண்டுகளுக்கு முன்பு, தோல்வியுடன் இந்த மைதானத்தை விட்டுச் சென்றேன். அப்போது மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது அதே மைதானத்தில் கோப்பையை வென்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. மத்தியப் பிரதேச அணிக்காக நான் 6 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன்.

எனவே இந்த அணியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அதுமட்டுமில்லாமல் நான் தவறவிட்ட வெற்றி வாய்ப்புகள் குறித்து நிறையத் தருணங்களில் வருந்தியிருக்கிறேன். எனவே மத்தியப் பிரதேசம் மீண்டும் ரஞ்சிக் கோப்பையை வெல்ல ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பேன். எனவே அந்த அணிக்கு பயிற்சியாளராகப் பணியாற்ற வாய்ப்பு வந்ததும் அதை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டேன். தற்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு நான் இழந்ததை மீண்டும் பெற்றுவிட்டேன். அதுவும் அதை எங்கு இழந்தேனோ அங்கேயே பெற்றது என்பது கடவுளின் அருள்" என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/4ufz97i

Post a Comment

0 Comments