Charlie 777: ``நாய்களின் அன்பு தூய்மையானது..!" - படம் பார்த்துவிட்டு கண்கலங்கிய கர்நாடக முதல்வர்

கடந்த ஜூன் 10-ம் தேதி கே கிரண் ராஜ் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த சார்லி 777 படம் திரையரங்குகளில் வெளியானது. செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கொண்டாடிவரும் இந்த படம் கதாநாயகனுக்கும், நாய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

பசவராஜ் பொம்மை

இந்த நிலையில், சார்லி 777 திரைப்படத்தைக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று திரையரங்கம் சென்று பார்த்திருக்கிறார். அப்போது முதல்வர் பசவராஜ் மனமுடைந்து அழுதிருக்கிறார். படம் முடிந்து கண்களைக் கசக்கியபடி அவர் திரையரங்கத்திலிருந்து வெளியே வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன. செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம்கொண்டவராக அறியப்படும் பசவராஜ் பொம்மை, தன் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார். அந்த நாய் கடந்தாண்டு உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டது. நாயின் இழப்பைத் தாங்க முடியாமல் அதன் சடலத்தின் முன்பு பசவராஜ் தன் குடும்பத்தினருடன் அழுத புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. தான் ஆசையாக வளர்த்து இறந்து போன நாயின் நினைவாகத்தான் முதல்வர் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றதாகவும், பின்னர் கண் கலங்கியதாகவும் கூறப்படுகிறது.

பசவராஜ் பொம்மை வளர்ப்பு நாய் இறந்த போது

இது தொடர்பாக படம் பார்த்துவிட்டு ஊடகங்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, ``நாய்களைப் பற்றிய திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், இந்த திரைப்படம் நம் உணர்ச்சிகளை நம்முடைய செல்லப்பிராணிகளுடன் பிணைத்து விடுகிறது. படம் நன்றாக இருக்கிறது. அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும். நாயின் அன்பு என்பது நிபந்தனையற்ற அன்பு, அது தூய்மையானது" எனக் கூறினார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/5uCE6PT

Post a Comment

0 Comments