மும்பையில் மொபைல் ஆப் மூலம் கடன் பெற்று பணத்தை சரியாக திரும்ப செலுத்தாதவர்களுக்கு மொபைல் போனில் தொடர்ந்து மிரட்டல் அழைப்புகள் வந்தன. போனில் மிரட்டியவர்கள் கடன் பெற்றவர்களின் மொபைல் போன் தொடர்பில் இருப்பவர்களின் நம்பர்களை திருடி, அவர்களுக்கும் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தனர். அதோடு கடன் பெற்றவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசபடமாக சித்தரித்து அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கடந்த மாதம் மும்பையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது போன்ற புகார்கள் அதிகமாக வந்ததையடுத்து இது குறித்து விசாரிக்கும் படி மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் சைபர் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சைபர் பிரிவு போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தீவிர விசாரணைக்கு பிறகு துலே என்ற நகரை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் மூலம் இவ்வழக்கில் துப்பு கிடைத்தது.
இது குறித்து சைபர் பிரிவு எஸ்.பி சஞ்சய் அளித்த பேட்டியில், ``துலேயை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவரின் போன் நம்பரை வாட்ஸ் ஆப் நம்பராக குற்றவாளி பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. காய்கறி வியாபாரியிடம் விசாரித்தபோது, அவரின் போன் நம்பர் அவரிடம்தான் இருந்தது. அவரின் போனுக்கு ஒரு ஒன்டைம் பாஸ்வேர்டு வந்தது. அதனை பயன்படுத்தி குற்றவாளி எங்கு இருக்கிறான் என்பதை கண்டுபிடித்தோம். கர்நாடகா மாநிலம் தார்வாடு என்ற இடத்தில் குற்றவாளிகள் இருப்பதை கண்டுபிடித்தோம். உடனே தனிப்படை போலீஸார் விரைந்து சென்று ரெய்டு நடத்தி அகமத் உசேன் என்பவரை கைது செய்தோம். அவர் மாதம் 12 ஆயிரம் சம்பளத்திற்கு மொபைல் ஆப்பிற்காக கடனை வசூலிக்கும் வேலை செய்து வந்தார். அவரிடம் விசாரணை நடத்தி சுஹைல் செய்யத், செய்யத் மொகமத், மொகமத் கைஃப், முப்தியாஸ் ஆகியோரை கைது செய்தோம். இவர்கள் ஹேப்பி லோன் ஆப்பிற்காக வேலை செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தினமும் கடன் வாங்கியவர்களிடம் 40 ஆயிரம் ரூபாய் வசூலிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தினமும் 100 பேருக்காவது போன் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வசூலாகும் பணம் பல்வேறு யுபிஐ மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் சீன பிரஜைகளுக்கு தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். அது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/RBPaAzi
0 Comments