வயநாட்டில் சூறையாடப்பட்ட ராகுல் காந்தி அலுவலகம்; எஸ்.எப்.ஐ தொண்டர்கள்மீது போலீஸ் தடியடி!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம், வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-ஆக தேர்வானார். ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் வயநாடு கல்பற்றா பகுதியில் அமைந்துள்ளது. இதற்கிடையே எக்கோ சென்சிட்டிவ் சோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ சார்பில் கல்பற்றா பகுதியில் பேரணி நடைபெற்றது. அப்போது சுமார் 40-க்கும் மேற்பட்ட எஸ்.எஃப்.ஐ தொண்டர்கள் திடீரென பேரணியிலிருந்து விலகி ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த ராகுல் காந்தியின் போட்டோ, மஹாத்மா காந்தி போட்டோ ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. மேலும், அலுவலகத்தில் இருந்த பைல்கள் இருக்கைகளும் சேதப்படுத்தப்பட்டன. ராகுல் காந்தியின் இருக்கையில் வாழை மரங்களையும் நட்டு வைத்தனர். அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் 3 பேர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஊழியர்கள் மூன்றுபேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

ராகுல் காந்தி இருக்கை மீது நடப்பட்ட வாழை மரம்

இதற்கிடையே ராகுல் காந்தியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய எஸ்.எஃப்.ஐ தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். அதில் சுமார் 10 பேருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் இரண்டாவது மாடியில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் போலீஸார் வேடிக்கை பார்த்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் முதல்வர் பினராயி விஜயன் மீது கடத்தல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து முதல்வர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலடியாக காங்கிரஸ் அலுவலகங்கள்மீது சி.பி.எம் தரப்பு தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு சில சி.பி.எம் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. இந்த நிலையில் எக்கோ சென்சிட்டிவ் சோனுக்கு எதிராக பேரணி நடத்திய எஸ்.எஃப்.ஐ தொண்டர்கள் ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேதப்படுத்தப்பட்ட காந்தி போட்டோ

இது பற்றி காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறும்போது, ``முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரிந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறப்படும் மாநில முதல்வர், மத்திய பா.ஜ.க அரசை சந்தோஷப்படுத்த இதுபோன்று தாக்குதல் நடத்த குண்டர்களை அனுப்பியிருக்கிறார். கேரளாவில் கலவரத்தை ஏற்படுத்த பினராயி விஜயன் முயல்கிறார்" என்றார்.

ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக காங்கிரஸ் போராட்டத்தில் குதித்திருப்பதால் கேரளாவில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/u6r3kDG

Post a Comment

0 Comments