கர்நாடகா மாநிலம், பிதார் மாவட்டத்தின் ஹெடாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் குஷால் பாட்டீல். விவசாயக் குடும்பத்தைச் இவர் அந்தப் பகுதியிலிருக்கும் அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் பகவந்த் குபாவிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஆசிரியர் குஷால் பாட்டீல், மத்திய இணையமைச்சர் பகவந்த் குபாவிடம் உரம் கிடைக்காதது குறித்து கேள்வி கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அமைச்சர் பகவந்த் குபா, ``நான் இந்திய அரசின் கீழ் அமைச்சராக இருக்கிறேன். மாநிலங்களைக் கவனித்துக்கொள்கிறேன். நீங்கள் இது குறித்து உங்கள் அதிகாரிகளிடம் முறையிடுங்கள். அவர்கள் செய்வார்கள்" என்று குஷால் பாட்டீலிடம் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிருப்தியடைந்த குஷால் பாட்டீல், ``நீங்கள் அடுத்தமுறை மீண்டும் பிதார் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட மாட்டீர்கள்" என பகவந்த் குபாவிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.
இருவரின் தொலைபேசி உரையாடல் வைரலானதையடுத்து, குஷால் பாட்டீல் குறித்து உள்ளூர் கல்வி அதிகாரி மூலம் விசாரணை தொடங்கப்பட்டு, முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில், `பொறுப்பின்மை மற்றும் தவறான நடத்தை காரணமாக தொலைபேசி உரையாடலை வேண்டுமென்றே பதிவுசெய்து சமூக ஊடகங்களில் வைரலாக்கினார்' என்று குஷால் பாட்டீல் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய குஷால் பாட்டீல், ``விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான் கடந்த சீசனில் உர சிக்கலை எதிர்கொண்டதால், அது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் கேட்டேன். அதன்பிறகு கடந்த சனிக்கிழமை எனக்கு பணியிடைநீக்கம் கடிதம் அனுப்பப்பட்டது" எனக் கூறினார்
from தேசிய செய்திகள் https://ift.tt/C41tE3G
0 Comments