உ.பி: மாணவி தற்கொலை... பாலியல் வன்கொடுமைசெய்து வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் கைது!

உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், பரேலியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.ஏ படித்து வந்தார். எம்.ஏ படிப்பு முடிந்தவுடன் அவருக்குத் திருமணம் செய்துவைப்பதற்குப் பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த மாணவி, தன் பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் குந்தர்கி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், ``எங்கள் மகள் படிக்கும் அதே கல்லூரியில் படிக்கும் இருவர் என் மகளைத் தாக்கி அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டுவதாக எங்கள் மகள் அண்மையில் எங்களிடம் கூறியிருந்தார். அந்த இருவரில் ஒருவர் எங்கள் உறவினர் மகன். ஆனால், எங்கள் மகள் எப்போது தாக்கப்பட்டாள் என்பது எங்களுக்குத் தெரியாது. அவள் நன்றாகப் படிக்கக்கூடியவள். எங்கள் மகளின் உயிரைப் பறித்த அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

பாலியல் வன்கொடுமை

இதற்கிடையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், இறந்த மாணவியின் பெற்றோர் தங்கள் புகாரில் குறிப்பிட்டிருந்த இருவர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்துவைத்துக்கொண்டு... அவரை மிரட்டியது தெரியவந்தது.

கைது

அதைத் தொடர்ந்து, போலீஸார் அந்த இருவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தனர். அதேபோல, இணையத்தில் பகிரப்பட்டு வந்த அந்த வீடியோவையும் சைபர் க்ரைம் போலீஸார் முடக்கினர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/ejQt7od

Post a Comment

0 Comments