``2024-க்கு பிறகு மாநிலங்களின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்துவார் மோடி" - சொல்கிறார் கர்நாடக அமைச்சர்

கர்நாடகா மாநிலத்தில் பெலகாவி பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த நிகழ்வில் கர்நாடகாவின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் வனத்துறை அமைச்சராக இருக்கும் உமேஷ் கட்டி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாட்டில் மாநிலங்களின் எண்ணிக்கை 50-க்கும் மேல் இருக்கும் என்று சமூக ஊடகங்களில் ஒரு விவாதம் டிரெண்டாகி வருகிறது. எனவே, கர்நாடகம் முழுவதுமுள்ள மக்கள் தொகை அடிப்படையில் வட கர்நாடகமும் தனி மாநிலமாக மாறும் என்பது உறுதி.

மோடி

2024 தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியே புதிய மாநிலங்களை உருவாக்குவார். மகாராஷ்டிரா மூன்றாகவும், கர்நாடகா இரண்டாகவும், உத்தரப்பிரதேசம் 4 மாநிலங்களாகவும் மாறும். இந்தியாவில் 50 மாநிலங்கள் உருவாகும். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியே நடவடிக்கை எடுப்பார். மேலும், பெங்களூரு நகரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது, குடிமக்களுக்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது. வட கர்நாடகாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது, வட கர்நாடகா மாநிலத்தைக் கோருவதற்கு மக்கள் கைகோர்க்க வேண்டும்" என வலியுறுத்திப் பேசியுள்ளார்.

ஹுக்கேரி சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உமேஷ் கட்டி, கடந்த 2019-ம் ஆண்டில் வடக்கு கர்நாடகாவுக்குத் தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அப்போதைய முதல்வர் பி.எஸ் எடியூரப்பாவிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை பாஜக-வுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும், இதைச் சுற்றி அப்போது பெரும் சர்ச்சைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/AaoTXhL

Post a Comment

0 Comments