மேக்கேதாட்டூ: அழுத்தம் கொடுக்கும் கர்நாடகா; டெல்லி வரை முட்டிமோதும் தமிழ்நாடு - பலன் கிடைக்குமா?

மேக்கேதாட்டூவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா அரசு தொடர்ந்து கூறிவருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மேக்கேதாட்டூ அணைத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடியை ஒதுக்கீடு செய்து கர்நாடகா அரசு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேக்கேதாட்டூ

‘பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கான குடிநீர் தேவைக்கு’ என்று சொல்லிக்கொண்டு, மேக்கேதாட்டூ என்ற இடத்தில் 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் அமைக்க ரூ.9,000 கோடியில் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து, அதை மத்திய அரசு, மைய நீர்வள ஆணையம், காவிரி மேலாண்மை ஆணையம் ஆகிவற்றின் ஒப்புதலைப் பெறுவதற்கு கர்நாடகா அரசு தீவிரமாக முயன்றுவருகிறது.

இது பற்றி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் விவாதிக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு வலியுறுத்திவருகிறது. ஆனால், கர்நாடகா அரசு இதற்கான முயற்சியை மேற்கொள்ளும்போதெல்லாம், அதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. இந்த நிலையில், மேக்கேதாட்டூ அணை எங்களின் உரிமை என்று கூறும் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘அணையைக் கட்டியே தீருவோம்’ என்று கூறிவருகிறார். மேலும், மத்திய அரசுக்கு அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறார்.

பசவராஜ் பொம்மை

கடந்த மார்ச் மாதம் கர்நாடகாவுக்கு சென்ற மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், இரு மாநிலங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதலைப் பெற்று மேக்கேதாட்டூ அணையைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். அதற்கு, தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேக்கேதாட்டூ அணை, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானது என்று துரைமுருகன் கூறினார். மேலும், மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசின் நீர்வளத் துறையும் காவிரி மேலாண்மை ஆணையமும் ஒப்புதல் வழங்கக் கூடாது என்றும், இதில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாகச் செயல்படக் கூடாது என்றும் துரைமுருகன் கூறினார்.

மேக்கேதாட்டூ அணை விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேக்கேதாட்டூ அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று அதன் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமருக்கும், மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

துரைமுருகன்

இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், “மேக்கேதாட்டூ அணையைக் கர்நாடக அரசு கட்டுவதும், தமிழகத்தின் காவிரி உரிமையைத் தடுப்பதும், தமிழகத்துக்கு வரும் நீர்வரத்தைக் குறைப்பதும் தமிழக விவசாயிகளுக்கு செய்யும் பெரும் துரோகம். இது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும், காவிரி தொடர்பான அனைத்து சட்ட விதிகளுக்கும் எதிரானது” என்றார்.

மேலும், “மேக்கேதாட்டூ அணையைக் கட்ட விடமாட்டோம். அது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பது தவறானது. தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் உச்ச நீதிமன்றத்தில் தொடரும். தி.மு.க அரசு, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் எந்த அளவுக்கும் சென்று போராடும், வாதாடும், தனது உரிமையை நிலைநாட்டும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ஸ்டாலின் கூறினார்.

இந்த நிலையில், ஜூன் 23-ம் தேதி நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்தக் கூட்டம் ஜூலை 6-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டூ குறித்து விவாதிக்கக் கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மு.க ஸ்டாலின்

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டூ அணைத் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்கேதாட்டூயில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கர்நாடகா அரசு அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை ஜூன் 22-ம் தேதி சந்தித்தது. மேக்கேதாட்டூ அணையை அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், அதற்காக மத்திய அரசிடம் தொடர்ந்து வாதாடி, போராடி வருகிறார். அதற்கு எந்தளவுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கிறது என்பது ஜூலை 6-ம் தேதி தெரியும்.



from தேசிய செய்திகள் https://ift.tt/3hGKS5w

Post a Comment

0 Comments