விஜய் நகர காவல் நிலையத்தில் வழக்கமாக காவல் துறை பறிமுதல் செய்து வரும் வாகனங்களே நிறைந்து நிற்கும் இடத்தில் புத்தம் புதிய மோட்டார் பைக் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த மோட்டார் வாகனத்தின் பின்னுள்ள சம்பவத்தை கேட்ட போதுதான் அது கடினமாக உழைக்கும் ஒரு இளைஞருக்கு காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கவிருக்கும் மோட்டார் பைக் என தெரிய வந்தது. இந்த பைக்கிற்காக 32,000 ரூபாய் முன்தொகையைக் காவலர்கள் செலுத்தி உள்ளனர்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடந்துள்ளது. விஜய் நகர காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான தேசீப் காஸி (Tehzeeb Qazi) மற்றும் காவலர்கள் சிலர் ரோந்து பணியின் போது 22 வயதான ஜெய் ஹால்டே (Jay Halde) என்கிற இளைஞரை பார்க்கிறார்கள். உணவு டெலிவரி செய்யும் பணியில் இருக்கும் ஜெய், சைக்கிளிலேயே சென்று உணவுகளை டெலிவரி செய்து வருகிறார்.
"குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவரால் மோட்டார் பைக் வாங்க இயலவில்லை என்பதை நாங்கள் அறிந்தோம். மனிதாபிமானத்தோடு நாங்கள் சிறிது பணம் கொடுத்து அவருக்கு மோட்டார் பைக் வாங்கிக் கொடுத்துள்ளோம். 32,000 ரூபாய் முன்தொகையும் முதல் தவணையும் சேர்த்து செலுத்தியிருக்கிறோம். மற்ற தவணைகளை அந்த இளைஞரே கட்டிக் கொள்வதாகத் தெரிவித்து இருக்கிறார். ஆனாலும் அதில் பிரச்னை இருந்தால் நாங்கள் உதவுவோம்" என்கிறார் தேசீப் காஸி.
"ஒரு நாளைக்கு 6-8 உணவு பார்சல்களை சைக்கிளில் சென்று டெலிவரி செய்து வந்தேன். இப்போது பைக் கிடைத்திருப்பதால் 15-20 பார்சல்கள் வரை டெலிவரி செய்ய முடியும்" என நம்பிக்கையோடு பேசுகிறார் ஜெய். காவலர்களின் இந்தச் செயல் சமூக வலைதளத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/dM6pFrC
0 Comments