உ.பி-யில் ரூ.775 கோடி மதிப்பு போதைப்பொருளை பறிமுதல் செய்த குஜராத் போலீஸார்! - சிக்கியது எப்படி?

குஜராத், பஞ்சாப் பகுதிகளுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது சமீப காலமாக அதிகரித்து இருக்கிறது. சமீபத்தில் பஞ்சாப்பில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கயிற்றை போதைப்பொருள் இருந்த தண்ணீரில் நனைய வைத்து அதனை காயவைத்து இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதையும் அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துவிட்டனர். இதே போன்று குஜராத்தில் நடுக்கடலில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் ரெய்டு நடத்தி 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்து 9 பாகிஸ்தானியர்களையும் கைது செய்தனர். இதையடுத்து இவ்விவகாரத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் சேர்ந்து குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தி 35 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர்.

கயிற்றில் போதைப்பொருளை மறைத்து கொண்டு வந்த காட்சி

கைது செய்யப்பட்டவர்களில் ராஜி ஹைதர் என்பவரின் உத்தரப்பிரதேச இல்லத்தில் இருந்துதான் 35 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜி ஹைதர் மேலும் அதிகப்படியான போதைப்பொருள்களை தனது சகோதரி வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக குஜராத் தீவிரவாத தடுப்பு படை அதிகாரிகளுக்கு நம்பகமான தகவல் கிடைத்தது. இதையடுத்து குஜராத் தீவிரவாத தடுப்பு படை, டெல்லி போலீஸ் சிறப்பு படை, உத்தரப்பிரதேச போலீஸார் இணைந்து முஜாபர்பூரில் ராஜி ஹைதரின் சகோதரி இல்லத்தில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 155 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.775 கோடியாகும்.

இது தவிர ஹெராயின் தயாரிக்க பயன்படும் 55 கிலோ பவுடரும் பிடிபட்டுள்ளது. இதையும் சேர்த்து சமீபத்தில் மட்டும் 296 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1500 கோடியாகும். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆப்கானிஸ்தானில் இருந்து வாகனங்களில் இந்தியாவுக்குள் போதைப்பொருட்களை கொண்டு வந்து அங்கிருந்து வெளியிடங்களுக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தவிர குஜராத் கடற்கரை வழியாக போதைப்பொருள் கடத்தி வருவது பாகிஸ்தான் கடத்தல்காரர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இந்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/eOjshnX

Post a Comment

0 Comments