கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பேரணி கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. அந்தப் பேரணியில் கலந்துகொண்ட ஒருவரின் தோளில் அமர்ந்திருந்த சுமார் 9 வயது சிறுவன்ஒருவன் எழுப்பிய கோஷம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அந்த சிறுவன், ``அரிசியும், பூவும் வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். குந்திரிக்கம் (சாம்பிராணி பொடி) வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் எமன்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒழுங்காக வாழ்ந்தால் நம் ஊரில் வாழலாம். ஒழுங்காக வாழாமல் இருந்தால் நமக்கு தெரியும் ஆஷாதி. ஒழுங்காக வாழ்ந்துகொள்ளுங்கள்..." என கோஷம் எழுப்பியதை அந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கேட்டு திருப்பிக் கூறினார்கள். அரிசியும், பூவும் இந்துக்களின் இறுதி சடங்கில் பயன்படுத்தப்படுவதாகும். சாம்பிராணி கிறிஸ்தவர்கள் இறுதிச்சடங்கில் பயன்படுத்தப்படுவதாகும். எனவே பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பினர் இந்து, கிறிஸ்தவ சமூக மக்களுக்கு எதிரான கொலை மிரட்டல் எச்சரிக்கையாக இந்த பேரணியில் கோஷம் எழுப்பியதாக சர்ச்சை கிளம்பியது.
இதுபற்றி மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்தது. மேலும் இதுபற்றி விசாரணை நடத்த டி.ஜி.பி-க்கு குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாது பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆலப்புழா சவுத் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் ஆலப்புழா மாவட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா செயலாளர் முஜீப், மாவட்டத் தலைவர் நவாஸ் வண்டான ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் கண்டால் தெரியும் நபர்கள் என சிலர் மீதும், சிறுவனின் பெற்றோர்மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலப்புழா சவுத் போலீஸார் பதிந்த எஃப்.ஐ.ஆரில் மத ரீதியான பிரச்னையை ஏற்படுத்த குழந்தையைக்கொண்டு கோஷம் எழுப்ப வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவனை தோளில் சுமந்துசென்ற கோட்டயம் ஈராற்றுப்பேட்டையைச் சேர்ந்த அன்சார் நஜீப் என்பவரை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி மத்திய உள்துறை அமைச்சகமும் விசாரணை நடத்தி வருகிறது. அதே சமயம் சிறுவன் கூறியது நாங்கள் எழுதிக்கொடுத்த கோஷம் அல்ல என பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/te3EAZX
0 Comments