திருமணம் மீறிய உறவுக்குத் தடை; தூக்க மாத்திரைக் கொடுத்து ஓடும் காரிலிருந்து கணவனை தள்ளிக் கொன்ற பெண்

மும்பை அருகில் உள்ள நவிமும்பை கோபர் கைர்னே என்ற இடத்தில் வசித்தவர் சவ்கர் குலே(48). இவரின் இரண்டாவது மனைவி பல்லவி குலே(38). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு மும்பை-புனே நெடுஞ்சாலையில் சவ்கர் குலே மர்மமான முறையில் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர் உடலை கைப்பற்றிய போலீஸார் விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்தனர். சவ்கர் சகோதரர் தன் சகோதரனை காணவில்லை என்று போலீஸில் புகார் செய்திருந்தார். அதனடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் போலீஸார் அவரின் இரண்டாவது மனைவி பல்லவியை அழைத்து மீண்டும் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில் பல்லவிதான் தன் கணவருக்குத் தூக்க மாத்திரையை கொரோனா தடுப்பு மருந்து எனச் சொல்லி கொடுத்து சாப்பிடச்செய்து கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் அனில் கூறுகையில், ``பல்லவி சொத்துக்கு ஆசைப்பட்டு சவ்கரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு சவ்கரின் சொந்த ஊரிலிருக்கும் சொத்தை விற்பனை செய்யும்படி தன் கணவரிடம் பல்லவி வற்புறுத்தியிருக்கிறார். சவ்கரும் தனது சொத்தை விற்பனை செய்திருக்கிறார். ஆனால் பணத்தை வாங்காமல் இருந்தார்.

கொலை

இந்த நிலையில், கோபர் கைர்னே பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருடன் பல்லவிக்கு திருமணம் மீறிய உறவு இருந்தது சவ்கருக்கு தெரியவந்தது. இதைத் தெரிந்து கொண்டபிறகு, சவ்கர் தன் மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு, தனது சொந்த ஊரான ஜுன்னார் புறப்பட்டுச் சென்றார். பல்லவியும் ஜுன்னார் சென்று தன் கணவரை சமாதானப்படுத்தி மீண்டும் காரில் மும்பைக்கு அழைத்து வந்தார்.

தூக்க மாத்திரை கொடுத்து கொலை

வரும் வழியில் தூக்க மாத்திரையை பொடி செய்து கொரோனா தடுப்பு மருந்து என்று கூறி கொடுத்துள்ளார். அந்த நேரம் கொரோனாவின் வீரியம் அதிகமாக இருந்தது. இதனால் கேள்வி கேட்காமல் சவ்கர் அந்த மருந்தை சாப்பிட்டார். உடனே விரைவில் உறங்கிவிட்டார். கார் புனே-மும்பை நெஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சவ்கரை சாலையில் தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்.

கைது

பின்னர் பல்லவி போலி இறப்புச் சான்றிதழை சொத்து வாங்கியவர்களிடம் காட்டி சொத்து விற்பனை செய்ததற்கான பணத்தை வாங்கிக்கொண்டார். பல்லவி இன்னொரு நபருடன் சேர்ந்து சதி செய்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். இதனால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரித்து வருகிறோம்."

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/CuqP4jT

Post a Comment

0 Comments