ஊட்டச்சத்துகளும், நோய் எதிர்ப்பு ஆற்றலும் மிகுந்த பாரம்பர்ய உணவுகளை விட, மேற்கத்திய ஃபாஸ்ட் ஃபுட் வகைகள் மீதான ஈர்ப்பு இன்றைய தலைமுறைக்கு சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, கோழி இறைச்சியில் தயாரிக்கப்படும் ஷவர்மாவை காலை, மாலை உணவாக இளைய தலைமுறையினர் பலர் சாப்பிடுகிறார்கள். கோழிக்கறியை தனியாக எடுத்து, அதை மெக்கனைஸ்டு மெஷினில் வேகவைத்து ஷவர்மா உணவு தயாரிக்கப்படுகிறது.
கேரளத்தில், சமீபத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட கண்ணூர் கரிவெள்ளூரைச் சேர்ந்த 16 வயது மாணவி தேவநந்தா உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காசர்கோடு செறுவத்தூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த 'ஐடியல் கூல்பாரி'ல் ஷவர்மா சாப்பிட்ட தேவநந்தாவுக்கு சில நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். மேலும் அங்கு சாப்பிட்ட சுமார் 36 மாணவ, மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்து வீடு திரும்பியிருக்கிறார்கள். உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி இல்லாமல் செயல்பட்ட அந்த 'கூல்பார்' சீல் வைக்கப்பட்டது.
கெட்டுப்போன கோழி இறைச்சியில் ஷவர்மா தயாரிக்கப்பட்டதால் தேவநந்தாவுக்கு ஃபுட் பாய்சன் ஆனதாக விசாரணையில் தெரியவந்தது. 'கூல்பார்' உரிமையாளரான மங்களூரைச் சேர்ந்த முகம்மது அனஸ், மற்றும் ஷவர்மா தயாரித்த நேபாளத்தைச் செர்ந்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
தரமில்லாத சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் உயிர் பலிபோவது கேரளத்தில் இது முதன்முறை இல்லை. 2012 ஜூலையில் திருவனந்தபுரத்தில், கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நடைபெற்றது.
இந்நிலையில், தேவநந்தா உயிரிழப்பை தொடர்ந்து தற்போது உடனடியாக சுகாதாரத்துறை நடவடிக்கையில் இறங்கியது. மோசமான இறைச்சியில் ஷவர்மா தயாரிப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து கொச்சி உள்ளிட்ட நகரங்களில் சுமார் 50 உணவகங்களில் ரெய்டு நடத்தப்பட்டு, அவை சீல் வைக்கப்பட்டன. மேலும், ஃபுட் பாய்சன் ஆபத்தை தடுக்கும் விதமாக சிக்கன் ஷவர்மா தயாரிக்க புதிய விதிமுறைகள் வெளியிடப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
இது பற்றி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "ஷவர்மா தயாரிப்பதற்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் புதிய விதிமுறை ஏற்படுத்தப்படும். ஷவர்மா தயாரிப்பதில் சுத்தமும், சுகாதாரமும் உறுதிசெய்யப்பட வேண்டும். ஷவர்மா உணவு ஆபத்தாக மாறாமல் இருக்க புதிய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதுபற்றிய வழிகாட்டு நெறிமுறையை சமர்ப்பிக்க உணவு பாதுகாப்புத்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். பெரும்பாலும் ஷவர்மா உணவுக்குப் பயன்படுத்தும் சிக்கன் நன்றாக வேகவைக்கப்படுவது இல்லை. ஷவர்மாவில் பயன்படுத்தும் மயோனைஸ் பச்சை முட்டையில் தயாரிக்கப்படுகிறது.
நேரம் செல்லச் செல்ல பச்சை முட்டையில் பாக்டீரியாவின் அளவு அதிகரிக்கும். அதுதான் சாப்பிடுபவர்களுக்கு பெரும்பாலும் மோசமான நிலையை ஏற்படுத்தும். அதற்கு, பதப்படுத்தப்பட்ட (Pasteurization) முட்டைகளை பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டு விஷயங்களிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். முழுவதுமாக சிக்கனை வேகவைக்க தகுதி உள்ள மெக்கனைஸ்டு மெஷின் மட்டுமே ஷவர்மா தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும். அதில் குறிப்பிட்டிருக்கும் சரியான அளவில் மட்டுமே சிக்கனை வைக்க வேண்டும். அதிகமாக வைக்கக்கூடாது. சிக்கனின் அனைத்து பாகங்களும் நன்றாக வேகவைக்கப்பட்டதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். எந்த உணவாக இருந்தாலும் அதை பரிமாறுகிறவர் சுத்தமாக இருக்க வேண்டும்" என்றார்.
உணவகங்களில், உணவே விஷமாகும் அவலத்தையும் குற்றத்தையும் தடுக்க அரசு உரிய, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
from தேசிய செய்திகள் https://ift.tt/pW42hsk
0 Comments