மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் ஆதிவாசி மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களிடம், ஓர் ஆடவர் எத்தனை பேரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம், அல்லது திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில், இங்குள்ள நான்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சம்ரத் மவுரியா என்பவர், மூன்று பெண்களை காதலித்து வந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது மவுரியா காதல் வயப்பட்டார். அதோடு அவர்களுடன் திருமணம் செய்து கொள்ளாமலே கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்.
மவுரியாவிடம் போதிய பண வசதி இல்லாததால், தான் காதலித்த மூன்று பெண்களையும் அவரால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் மூன்று பெண்களுடனும் மவுரியா ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். தன் மூன்று காதலிகளுடன் மவுரியாவிற்கு 6 குழந்தைகள் உள்ளனர். குறிப்பாக, நான்பாய் என்ற பெண்ணுக்கு மட்டும் 4 குழந்தைகள் இருக்கின்றனர். மற்ற இரண்டு பெண்களுக்கும் தலா ஒரு மகன் உள்ளார்.
என்றாலும், முறைப்படி திருமணம் செய்து கொள்ளாத காரணத்தால் மவுரியாவின் காதலிகளால் உறவினர்களின் சடங்குகள் மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. அதோடு தற்போது மவுரியாவுக்கு ஓரளவுக்கு வசதி வந்துவிட்டது. எனவே, தன் மூன்று காதலிகளுக்கும் மனைவி அந்தஸ்து கொடுக்க மவுரியா முடிவு செய்தார். அவர்களை திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தார்.
மவுரியா மற்றும் அவர் காதலிகளுக்கான திருமணச் சடங்குகள் மூன்று நாள்கள் நடைபெற்றன. திருமண அழைப்பிதழ் அச்சடித்து அனைவருக்கும் கொடுத்து, ஒரே மேடையில் மூன்று காதலிகளையும் மவுரியா திருமணம் செய்து கொண்டார். மூன்று பெண்களும் வேறு வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். திருமணத்தில் மூன்று பெண்களின் உறவினர்களும், உள்ளூர் தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்.
மவுரியா, அவர் காதலிகளின் திருமணச் செய்தி மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராகவேந்திர சிங்கிடம் கேட்டபோது, 'ஆதிவாசி சமுதாயத்தில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்ய முடியுமா என்று என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் ஆதிவாசிகள் தங்களுக்குள் சில நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர்' என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/cvWVLhf
0 Comments