``கேரளத்தை உலுக்கிய விஸ்மயா மரண வழக்கில் கணவர் குற்றவாளி” - ஓராண்டுக்குள் வழங்கப்பட்ட தீர்ப்பு

கேரள மாநிலம் கொல்லம் நிலமேடு பகுதியைச் சேர்ந்த திரிவிக்கிரமன் நாயரின் மகள் விஸ்மயா(24). இவர் பந்தளம் ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். படிப்பு முடியும் முன்பே விஸ்மயாவுக்கும் போருவழி அம்பலத்தும் பாகத்தே வீட்டைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளரான கிரண் குமாருக்கும் 2020-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 100 பவுன் தங்க நகைகள், ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலம், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்திருக்கிறார்கள். ஆனால் காரின் மதிப்பு குறைவு என கூறி விஸ்மயாவை கணவர் கிரண்குமார் டார்ச்சர் செய்து இருக்கிறார்.

கிரண்குமார் - விஸ்மயா

இதுபற்றி விஸ்மயா தன் உறவினர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் தகவலில், 'வரதட்சணையாக கொடுத்த கார் அதிக மைலேஜ் கொடுக்காததால் கணவர் என்னையும் அப்பாவையும் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நான் அறையை விட்டு வெளியே செல்ல முயன்றபோது என்னை தரையில் தள்ளி முகத்தில் மதித்தார்' என கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது முகத்தில் காயத்தன் இருக்கும் தனது புகைப்படத்தையும் விஸ்மயா வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். இதையடுத்து 2021 ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி கணவர் வீட்டில் பாத்ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் விஸ்மயா இறந்துகிடந்துள்ளார்.

இதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தி கிரண் குமாரை கைது செய்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் வேலையில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு கொல்லம் ஒன்றாம் அடிஷனல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கொலை நடந்து ஒரு ஆண்டுக்கு உள்ளாகவே இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் 42 சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்டன, 120 ஆதாரங்கள் பரிசோதிக்கப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி கே.என்.சுஜித் அளித்த தீர்ப்பில் விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த வழக்கில் தண்டனை நாளை அறிவிக்கப்படும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வரதட்சனை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல், குடும்ப வன்முறை ஆகிய குற்றங்கள் இந்த வழக்கில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கிரண்குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரதட்சிணை கேட்டு தாக்கப்பட்டதாக விஸ்மயா வெளியிட்ட போட்டோ

மகளின் மரணத்துக்கு நீதி கிடைத்துள்ளதாக விஸ்மயாவின் தந்தை திரிவிக்கிரமன் நாயரும், தாய் சஜிதாவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி விஸ்மயாவின் தாய் சஜிதா கூறுகையில், "என் மகளுக்கு ஏற்பட்ட கதி வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. அதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதவியாக இருக்கட்டும். கிரண்குமாருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன். எங்களுடன் உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி" என்றார். கேரளாவை உலுக்கிய விஸ்மயா மரண வழக்கில் ஒராண்டுக்குள்ளாகவே தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், அவரது கணவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/v2iIqEg

Post a Comment

0 Comments